நாட்டுக்குப் புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் கூறுவது நாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று சொல்வதற்குச் சமனானது.
மகாநாயக்க தேரர்கள் தமது முடிவை உடனடியாக மீள்பரிசீலனை செய்யவேண்டும். இதுதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளாக இருக்கின்றது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்க தேரர்கள் நேற்று முன்தினம் கண்டியில் ஒன்றுகூடி முடிவெடுத்துள்ளனர். இதனை அரசிடம் நேரில்தெரியப்படுத்தப் போவதாகவும் கூறியிருந்தனர்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சி இப்போது ஆரம்பிக்கப்படவில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்னரே அது ஆரம்பிக்கப்பட்டது. நாட்டிலுள்ளஅனைவருக்கும் இது தெரியும்.
இவ்வாறான நிலையில், மகாநாயக்க தேரர்கள் திடீரென புதிய அரசியலமைப்புக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
அவர்கள் தங்களுடையஎதிர்ப்பு நிலைப்பாட்டை கண்டியில் ஒன்றுகூடி எடுத்துள்ளனர். இவர்கள் ஏன் தீடீரென்று இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, சிலநாட்களில் இறுதி செய்யப்படக்கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் புதிய அரசியலமைப்புத் தேவையில்லை என்று மகாநாயக்கதேரர்கள் கூறுவது நாட்டில் நல்லிணக்கம் தேவையில்லை என்று கூறுவதற்கு ஒப்பானது.

எனவே, மகாநாயக்க தேரர்கள் தங்களது நிலைப்பாடுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்.இது எமது வேண்டுகோளாகவும் இருக்கின்றது என்றார்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top