பாம்புகளுடன் வாழ்க்கை நடத்தியவரின்
உயிரை காவு வாங்கிய ராஜநாகம்

பாம்புகளை பிடித்து கொஞ்சி விளையாடுவது, முத்தமிடுவது என மக்களிடையே மிகவும் பிரபலமான கோலாலம்பூரை சேர்ந்த அபு ஜாரின் ஹுசைன் பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த அபு ஜாரின் ஹூசைன் பாம்புகள் பிடிப்பதில் வல்லவராக வலம் வந்தார். தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்த இவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோலாலம்பூர் தீயணைப்பு துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் அபு ஜாரின் ஹூசைன் (33). இவர் தீயணைப்பு துறையில் மீட்புப்பணியோடு பாம்புகள் எங்கேயாவது இருக்கிறதென்று தகவல் கிடைத்தால் அங்கு சென்று பாம்புகளை கொல்லாமல் அதை பாதுகாப்பாக பிடித்துவந்து உயிரியல் பூங்காவில் விடும் பணியையும் செய்து வந்தார்.
விடுமுறையில் இருந்தால் கூட மக்கள் அழைத்தால் முகம் சுளிக்காமல் சென்று இலவசமாக சேவை செய்து வந்தார். பாம்பின் நண்பர் என்று செல்லமாக ஹூசைன் அழைக்கப்பட்டார். மிகக் கொடிய விஷம் கொண்ட ராஜ நாகம், விஷம் கக்கும் நாகம், மாம்பா எனப்படும் ஆஸ்திரேலியன் வகை கொடிய விஷப் பாம்புகளை வைத்து ஹூசைன் செய்த சாகசக் காட்சிகள் மிகப் பிரபலம்.
இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன் ஒரு இடத்தில் விஷம் கக்கும் நாகம் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைப்பிடிக்கும் முயற்சியில் ஹூசைன் ஈடுபட்டிருந்த போது அவரை பாம்பு கடித்தது. இதையடுத்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் ஹூசைன் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் துரதிஸ்டவசமாக 4 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
ஹூசைன் குறித்து கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையின் இயக்குனர் கிருதீன் தர்மன் கூறுகையில் :- அபு ஜூரின் விடுமுறையில் தனது குடும்பத்தாருடன் இருந்தாலும் பொதுமக்களில் யாராவது பாம்பு பிடிக்கக் கோரி தொலைபேசியில் அழைத்தால் உடனே சென்றுவிடுவார். ஆனால் துரதிருஷ்டவசமாக கடந்த 5 நாட்களுக்கு முன் அவரை விஷம் கக்கும் நாகம் கடித்துவிட்டது.
இந்த பாம்பின் ஒரு கடிவிஷம் ஒரு யானையை கொல்லும் அளவுக்கு கொடூரமானது. மிகச்சிறந்த அதிகாரியை இழந்துவிட்டோம் என அவர் தெரிவித்தார்.
அபு ஜூரின் தான் மட்டுமல்லாமல் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களுக்கும் பாம்பு பிடிக்கும் கலையை கற்றுக்கொடுத்து விழிப்புணர்வு ஊட்டி வந்துள்ளார்.
அபு ஜுரின் உடல் அவரின் சொந்த நகரான கெலாண்டன் நகரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன் அபுஜூரினை பாம்பு கடித்து இருநாட்கள் கோமாவில் இருந்து உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top