சசிகலாவின் கணவர் நடராசன் காலமானார்!

சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியரும், ஈழ விடுதலைப் போராட்டத்தை தீவிரமாக ஆதரித்து வந்த தமிழ் உணர்வாளருமான .நடராசன் இன்று அதிகாலை காலமானார்.
உடல்நலக் குறைவினால், சென்னையில் உள்ள குளோபல் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த . நடராசன் இன்று அதிகாலை 1.30 மணியளவில் காலமானார் என்று மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் கணவர் நடராசன், கல்லீரல் மற்றும் சீறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, அவருக்கு சமீபத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்பு, அவரை பார்ப்பதற்காகச் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா 5 நாள்கள் பரோலில் வந்தார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவாறு அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
தஞ்சாவூரைச் சேர்ந்த நடராசன், அரசு மக்கள் தொடர்பு அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கியவர். தி.மு. மாணவரணியில் இருந்தபோது, கருணாநிதி முன்னிலையில் சசிகலாவை மணந்தார். மக்கள் தொடர்பு அதிகாரி என்பதால், அரசு அதிகாரிகளுடன் நட்பு பாராட்டி வந்தார். அந்த வகையில், கலெக்டர் சந்திரலேகாவுடன் ஏற்பட்ட நட்பால், அவர்மூலம் ஜெயலலிதாவின் அரசியல் பொதுக்கூட்டங்களை வீடியோ கவரேஜ் எடுக்கும் வேலையைத் தனது மனைவி நடத்திவந்த 'வினோத் வீடியோ' கடைக்கு வாங்கிக் கொடுத்தார்.
இதன்மூலம் ஏற்பட்ட நட்பால், பின்னாளில் ஜெயலலிதாவுடனே சசிகலாவும், நடராசனும் தங்கினர். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு, .தி.மு. ஜெயலலிதாவின் பக்கம் வந்தது. .தி.மு. தொடர்பான அனைத்து வேலைகளையும் நடராசன் கவனித்துவந்தார். ஆனால், நாளைடைவில் ஜெயலலிதாவுக்கும், இவருக்கும் மனக்கசப்பு ஏற்படவே, போயஸ்கார்டனை விட்டு வெளியேறினார். எனினும், சசிகலா அவருடன் செல்லவில்லை. போயஸ் கார்டனை விட்டுச் சென்றாலும், தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் நடராசன் ஈடுபட்டுவந்தார்.
மாணவப் பருவத்தில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மூலம், அரசியலில் நுழைந்த இவர், பின்னர் திமுகவுடன் இணைந்து செயற்பட்டார். எனினும் தேர்தல் அரசியலில் அவர் ஈடுபடவில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார்.
எம்.ஜி.ஆருக்குப் பின்னர் ஜெயலலிதாவை, அரசியலில் நிலை நிறுத்துவதிலும் இவர் கணிசமான பங்கை ஆற்றியிருந்தார்.
ஈழவிடுதலைப் போராட்டத்தின் மீது தீவிர பற்றுக் கொண்ட இவர், அதற்காக ஆட்சியாளர்களின் பல்வேறு நெருக்கடிகளையும், வழக்குகளையும் எதிர்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறைந்த நடராசனின் உடல் இன்று காலை பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அதன் பின்னர் தஞ்சாவூரில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top