292 முதலைகளை கொன்ற
இந்தோனேசிய கிராம மக்கள்
(படங்கள்)

இந்தோனேசியாவில் முதலை வளர்ப்புப் பண்ணையில் முதலை ஒன்று கடித்து ஒருவர் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகையில் கிராம மக்கள் அந்த பண்ணையில் இருந்த 292 முதலைகளையும் வெட்டிக் கொன்றுள்ளனர்.
மேற்கு பப்புவா மாகாணத்தில் இவ்வாறு கொல்லப்பட்ட முதலைகள் இரத்த வெள்ளத்தில் மலைபோல் குவிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை அன்டாரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கால்நடைகளுக்கு புல் பெறுவதற்காக அந்த முதலைப் பண்ணைக்கு சென்றிருக்கும் 48 வயது நபர் ஒருவரே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த நபரின் இறுதிக் கிரியைகள் முடிந்த பின்னர் கடந்த சனிக்கிழமை கிராம மக்கள் ஒன்று திரண்டு முதலைப் பண்ணைக்கு சென்று அனைத்து முதலைகளையும் வெட்டிக் கொன்றுள்ளனர். இதன்போது நான்கு அங்குல குட்டி முதலைகள் தொடக்கம் 2 மீற்றர் வளர்ந்த முதலைகள் வரை அனைத்தும் வெட்டிச் சாய்க்கப்பட்டன.
இந்த முதலைப் பண்ணைக்கு 2013 ஆம் ஆண்டு அனுமதி அளிக்கப்பட்டபோதும் உள்ளூர் சமூகத்தினருக்கு தொந்தரவின்றி பண்ணையை நடத்துவதற்கு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே அந்த முதலைப் பண்ணையை அகற்ற அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பண்ணை பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாகவும் அந்த முதலைப் பண்ணை உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.












0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top