சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய
45 பேருக்கு பதவியுயர்வு.
சதொச நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றிய முகாமைத்துவ உதவியாளர், மற்றும் அதற்கு மேற்பட்ட தரத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கும் நிகழ்வு இன்று (04) சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் பராஸ் தலைமையில் வொக்ஸோல் வீதியில் அமைந்துள்ள சதொச நிறுவனத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
சுமார் 12 வருடங்களின் பின்னர் 45 பேருக்கு இவ்வாறு பதவியுயர்வுக் கடிதங்களை அமைச்சர் றிஷாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர் றிஷாட் பதியுதீன் சதொச நிறுவனத்தில் 12 வருடங்களின் பின்னர் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறுவதையிட்டு நான் மகிழ்வடைகின்றேன். நஷ்டத்தில் பொறுப்பேற்கப்பட்ட சதொச நிறுவனத்தை மிகக்குறுகிய காலத்தினுள் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றி நாடளாவிய ரீதியில் தரமானதும், நியாயமானதுமான விலையில் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனமாக ஆக்கியுள்ளோம்.
சதொச தலைமையகம் மற்றும் கிளைகளில் நீண்ட காலமாக கடமைபுரியும் ஊழியர்களில் மேலும் 250 பேருக்கு இவ்வருடத்துக்குள் பதவியுயர்வுகள் வழங்கப்படுமென்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சதொச நிறுவனமானது தற்போது சுமார் 400 கிளைகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் பல்லாயிரம் பேர் தொழில் புரிகின்றனர். இந்நிறுவனங்களில் ஏதாவது பிரச்சினைகள் இருக்குமாயின் எந்நேரத்திலும் தன்னை தொடர்புகொள்ள முடியுமென அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
முன்னர் இருந்ததை விட சதொச இன்று போட்டி கரமானதாகவும், அதிக கிளைகளையும், அதிகமான ஊழியர்களையும் கொண்ட சங்கிலித் தொடரான இலாபமீட்டும் அரச வர்த்தக நிறுவனமாக இலங்கையில் திகழ்வது ஊழியர்களினதும் அயராத முயற்சியேயாகும்.
சதொச நிறுவனத்துக்குள் கடமைக்கு வந்துவிட்டால் தனிப்பட்ட பிரச்சினைகளை மறந்து ஒரே குடும்பம் என்ற நோக்கோடு ஒற்றுமையாக செயற்பட்டாலே இந்நிறுவனத்தை சிறப்பாக முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment