என் பிள்ளை போல் நினைத்து படிக்க வைப்பேன்

 சிறுவன் முஹம்மது யாசினை நெகிழவைத்த ரஜினி



சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை பொலிஸாரிடம் ஒப்படைத்து அனைவரின் பாராட்டையும் பெற்ற மாணவன் யாசினை நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது இல்லத்திற்கு அழைத்து சந்தித்து பேசினார்.
ஈரோடு கனி ராவுத்தர் குளம் நந்தவனதோட்டம் பகுதியை சேர்ந்த பாட்ஷா என்ற துணி வியாபாரியின் மகனான முஹம்மது யாசின் தற்போது சின்ன சேமூர் அரசு பாடசாலையில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். பாடசாலையின் அருகே ரோட்டில் 500ரூபாய் பணம் கட்டு கிடந்ததைப் பார்த்த முஹம்மது யாசின், அதை எடுத்து ஆசிரியையிடம் ஒப்படைக்க ஆசிரியை வழியாக அந்தப் பணம் ஈரோடு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு சென்றது.
ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த முஹம்மது யாசின் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை எடுத்துச் சென்று குடும்பத்தினரிடம் கொடுத்து செலவு செய்திருக்கலாம். ஆனால், பெற்றோரால் நேர்மையாக வளர்க்கப்பட்ட முஹம்மது யாசின் அந்தப் பணத்தை எடுத்து கொடுத்து உரியவரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸ் அத்தியட்சகர் சக்தி கணேசனிடம் கூறியது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.
இந்த அற்புதமான செயலே முஹம்மது யாசினை தற்போது ஈரோடு மக்கள் அனைவரும் அறியும்ரியல் ஹீரோவாக மாற்றி விட்டது. அவரது இந்த நேர்மையான செயலுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டு குவிகிறது. பலரும் அவருக்கு உதவ தயார் ஆனார்கள். ஆனால் அதிலும் பெருந்தன்மை காட்டி அந்த உதவிகளை ஏற்காமல் உதவி செய்வதாக கூறியவர்களுக்கு நன்றியை மட்டும் தெரிவிக்கிறார்கள் முஹம்மது யாசினும், அவரது பெற்றோரும்.
தனக்கு உதவிகள் எதுவும் வேண்டாம், ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என யாசின் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக இந்த செய்தி ரஜினிகாந்தை எட்டியது. அவரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்தை யாசின் தனது குடும்பத்தோடு சந்தித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் “பணத்துக்காகக் கொலை, கொள்ளை எனப் பல விசயங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், யாசின் தனக்கு கிடைத்த பணத்தை எண்ணுடையது இல்லை எனப் திருப்பி தந்துள்ளான். இந்தக் குணம், இந்த மனம் இதை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை.
இவனைப் பெற்றவர்கள் இவ்வளவு பண்பானவனாக வளர்த்தவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தற்போது சிறுவன் அரசுப் பாடசாலையில்  படித்துக்கொண்டிருக்கிறார். அவன் அங்கேயே படிக்கட்டும் என நான் பெற்றோர்களிடம் கூறியுள்ளேன். யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளைபோல் நினைத்து நான் படிக்க வைப்பேன். இவர்களைப் போன்ற குழந்தைகள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்  . காமராஜரின் பிறந்த நாளான இன்று யாசினை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
மேலும், சிறுவன் யாசினுக்கு அவர் தங்க சங்கிலி ஒன்றையும் பரிசளித்துள்ளார்.

.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top