பிச்சைவேண்டாம் நாயைபிடி என்ற நிலையில்
அரசியல் கட்சிகளின் தலைவர்களின் நிலை..!



விருப்புவாக்கு முறையை மாற்றப்போகின்றோம் என்றுகூறி அதற்கு ஆதரவளித்த அரசியல்கட்சிகள் இன்று அதுதான் வேண்டும் என்று அடம்பிடிக்கும் நிலைக்கு மாறிவிட்டார்கள். பழய தேர்தல் முறையிலுள்ள விருப்புவாக்குமறையை நேரடியாக கேட்பதற்கு பதிலாக வேறு காரணங்களைக்கூறி பழய முறையில் தேர்தலை நடத்துங்கள் என்று கூக்குரலிடுகின்றார்கள்.
அண்மையில் நடந்த உள்ளூராட்சி தேர்தலில் விகிதாசார முறைமூலம் கிடைத்த உறுப்பினர்களுள் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களை நியமித்துவிட்டு மீதியாக உள்ள உறுப்பினர்களை நியமிக்கும் போது அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ஞநஞ்மல்ல. அந்த அந்தக்கட்சிக்குள் இன்றும் அதன் தாக்கங்கள் இருந்துகொண்டுதான் வருகின்றது.
உள்ளூராட்சிமன்ற உறுப்பினர் பதவிகளுக்கே இவ்வளவு போட்டியென்றால் வருமானங்களை அள்ளிக்கொட்டும் மாகாணசபை உறுப்பினர்களைப் பெறுவதற்கு எவ்வளவு யுத்தம் செய்வார்கள் என்பது கட்சித்தலைவர்களுக்கு தெரியாத ஒன்றல்ல. இதன் காரணமாகவே பழய தேர்தல் முறையையில் தேர்தல் நடத்துங்கள் என்று கூறுகின்றார்கள்.
பழய தேர்தல் முறையில் விருப்புவாக்கு முறையில் உறுப்பினர்களுக்கு மத்தியில் பிரச்சினை நடந்தாலும் தேர்தல் நடந்து முடிந்ததன் பின் அதன் தாக்கங்கள் நின்றுவிடும். தேர்தலின் பின் எங்களுக்கும் உறுப்பினர்கள் தாருங்கள் என்று கட்சித்தலைவர்களை யாரும் நாடுவது கிடையாது, அதற்கு காரணம் ஏற்கனவே விருப்பு வாக்குகளின் மூலம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதனாலாகும். அதன் காரணமாக கட்சித் தலைவர்களின் தலை தப்பி வந்தது.

புதியதேர்தல் முறைமூலம் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தொகுதியில் தெரிவு செய்யப்படுபவர்களைத்தவிர மற்ற உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் கட்சியின் செயலாளர்களுக்கே இருக்கின்ற காரணத்தால், தேர்தல் முடிந்த கையோடு சகல உறுப்பினர்களும் கட்சித்தலைவர்களின் வாசல்படியிலேயே படுப்பார்கள். இதன் மூலம் கட்சியின் தலைமைகளுக்கு பல பிரச்சினைகள் தோன்றுவதற்கு அது காரணமாக அமைந்துவிடும்.
உள்ளூராட்சிசபை உறுப்பினர்களைக்கூட சமாளித்துவிடலாம், மாகாணசபை உறுப்பினர்களை சாந்தப்படுத்துவது மிகவும் கஷ்டமான காரியம் என்பது அதன் பெறுமதி தெரிந்தவர்களுக்கு தெரியாத ஒன்றல்ல.
கடந்த காலங்களில் தேசியப்பட்டியல் எம்பியை வைத்துக்கொண்டு பட்ட கஷ்டங்களும் அவர்களுக்கு அச்சத்தை கொண்டுவந்துள்ளது.
ஆகவே இந்தப்பிரச்சினையிலிருந்து தப்புவதாக இருந்தால் பழய தேர்தல் முறையிலுள்ள விருப்புவாக்கு முறையே சிறந்தது என்ற என்னத்தின் காரணமாக இவர்கள் அந்த முறையை மீண்டும் கொண்டுவருவதற்காகத்தான் வேறுகதைகளை பேசிக்கொண்டு வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
-முனைமருதவன்-

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top