கல்முனைப் பிரதேச முஸ்லிம், தமிழ், மக்களுக்கு
வழங்கப்பட்ட வாக்குறுதிகள்
நல்லாட்சியில் நிறைவேற்றப்படவில்லை
மக்கள் விசனம்
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம், தமிழ் மக்கள் நன்மை பெறக் கூடியவகையில் எந்த ஒரு பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளும் இந்த நல்லாட்சியில் இடம்பெறுவதாக இல்லை என இப்பிரதேச தமிழ்மொழி பேசும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பு விடயத்தில் இந்த நல்லாட்சியில் எவரும் எதுவும் பேசுவதாக இல்லை.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கல்முனை கடற்கரை மைதானத்தில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து தனது அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற சனத்திரளை பார்க்கவில்லை எனத் தெரிவித்த்துடன் அவர் சென்ற இடமெல்லாம் இம்மக்கள் கூட்டத்தை சிலாகித்துப் பேசியிருந்தார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான ரயில் பாதை விஸ்தரிப்பை மேற்கொள்ளப் போவதாகவும் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்ட்த்தில் ஒதுக்குவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.. கவனத்தில் எடுக்கப்படுவதாகவும் இல்லை.
இது போன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்முனை சந்தாங்க்கேணி மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கல்முனைப் பிரதேச அபிவிருத்திக்கென தனியான அதிகார சபை ஒன்றை அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார் அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக இல்லை.
இந்த நல்லாட்சியில் அம்பாறைக் கரையோரப் பிரதேசத்தில் உள்ள முஸ்லிம், தமிழ் மக்கள் நன்மை அடையக் கூடிய எந்த ஒரு பாரிய அபிவிருத்தி திட்டங்களும் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது நல்லாட்சிக்கு வாக்களித்த
மக்களுக்கு வேதனை அளிக்கக் கூடியதாக இருக்கின்றது.
கல்முனையில் உள்ள அரச செயலகக் கட்டடத்திற்குப் பின்னால் உள்ள பகுதியில் பாரிய கட்டடம் ஒன்றுக்கு அத்திபாரம் இட்ட நிலையில் சுமார் 30 வருடங்களாக ஒரு இடம் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது. இதுபற்றி அதிகாரத்தில் உள்ள எமது பிரதேச அரசியல்வாதிகள் எவரும் சிந்தித்து நடவடிக்கை எடுப்பதாகவும் இல்லை என மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் அம்பாறை மாவட்டத்தின்
கரையோரப்பிரதேசத்தில் இல்லாததன் காரணமாக இன்று சிலர் இந்த மக்களுக்கு ஒன்றுமே செய்யாமலும் இப்பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி சரியான
கரிசனை காட்டாமலும் வருடத்திற்கு ஒருமுறை கூட்டங்களைக் கூட்டி பில்லியன், மில்லியன்
செலவிலான அபிவிருத்தி என்று பேசிக்கொண்டு காலத்தைக் கடத்திக்கொண்டிருப்பதாகவும் மக்கள்
தெரிவிக்கின்றனர்.
0 comments:
Post a Comment