கல்முனையுடன் கல்முனைக்குடியை
பிணைத்துக் காட்ட முற்படும் முஸ்லிம் தரப்பினர்
இப்படிக் கூறுகின்றார் கோபாலப்பிள்ளை
முஸ்லிம் தரப்பினர் கல்முனைக்குடியைக் கல்முனையுடன் பிணைத்துக் காட்டுவது கல்முனைத் தமிழர்கள் மீதான ஆக்கிரமிப்பிற்கும், எதிர்காலத்தில் கல்முனைத் தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தலுக்குமான செயலாகும் என கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் த.கோபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்குப் பிரதேச செயலக எல்லை தொடர்பில் முஸ்லிம் தரப்பினர் கல்முனை மற்றும் கல்முனைக் குடி ஆகியவற்றை இணைத்து தவாறாக எல்லையிட முற்படுவது தொடர்பில் இன்று அவரது அலுவலகத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
கல்முனையையும், கல்முனைக் குடியையும் பிரிக்கும் பூர்வீக எல்லையாக விளங்கிய கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதிக்கு அப்பால் அதாவது வடக்கே ஒரு அங்குலமாவது விட்டுக் கொடுப்பது தற்கொலைக்குச் சமமாகும்.
கல்முனை வடக்கு உபபிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரத்தில் முஸ்லிம் தரப்பினர் கல்முனை என்பது தெற்கே கல்முனை ஸாகிராக் கல்லூரியிலிருந்து ஆரம்பித்து வடக்கே தாளவெட்டுவான் வரையும் உள்ளதாகச் சித்தரித்து அதனையே தங்களது பூர்வீகம் எனச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
அதற்குச் சார்பாக அவர்கள் முன்வைப்பது 1892ஆம் ஆண்டின் 18ஆம் இலக்கக் கட்டளைச்சட்டத்தின் கீழ் 1897ஆம் ஆண்டின் 5459 இலக்கமுடைய ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பெற்ற அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பெற்ற அப்போதைய கல்முனை சபையின் எல்லைகளையே ஆகும்.
இது நன்கு திட்டமிட்டுச் சோடிக்கப்பட்ட தவறான வாதம் ஆகும்.
கல்முனை என்பதும் கல்முனைக்குடி என்பதும் இரு வெவ்வேறு தனித்தனிக் கிராமங்களாகும். கல்முனைக்குடி
90வீதத்திற்கு மேல் முஸ்லிம்களைக் கொண்ட முஸ்லிம் பெரும்பாண்மைக் கிராமமாகும்.
கல்முனை என்ற பெயரில் தேர்தல் தொகுதியும், கல்முனை என்ற பெயரில் மாநகர சபையும், கல்முனை என்ற பெயரில் பிரதேச செயலகமும் அமைந்துள்ள காரணத்தால் முழுக் கல்முனைத் தேர்தல் தொகுதியும், முழுக் கல்முனை மாநகரசபைப் பிரதேசமும், முழுக் கல்முனைப் பிரதேசசெயலக பிரிவுப் பிரதேசமும் கல்முனை என்னும் பெயரில் ஒரு தனிக்கிராமம் ஆகிவிட முடியாது.
அதுபோலவே 1897இல் கல்முனையும், கல்முனைக் குடியும் இணைந்த சனிற்றறி சபை கல்முனை என்ற பெயரில் அமைந்த காரணத்தாலும் 1947இல் கல்முனையும், கல்முனைக்குடியும் இணைந்து கல்முனை என்ற பெயரில் பட்டின சபையாக அமைந்த காரணத்தாலும் முழு சனிற்றறி சபைப் பிரதேசமும், முழுப்பட்டின சபைப் பிரதேசமும் கல்முனை என்னும் பெயரில் ஒரு தனிக் கிராமமாகி விடமுடியாது என்பதை முஸ்லிம் தரப்பினர் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.