தவிசாளர் தாக்கியதாக இருவர் வைத்தியசாலையில்:
சம்பவத்தை மறுக்கிறார் தவிசாளர்
நிந்தவூரில் ஒரு இராஜாங்க அமைச்சர் இருந்தும்
பிரதேச சபையை கைப்பற்ற முடியாமல் போனதன்
வெளிப்பாடே இந்த விடயங்கள்
என்றும் தெரிவித்துள்ளார்
ஒலுவில் சுற்றுலா விடுதியில் இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் நேற்று முன் தினம் கைகலப்பு இடம்பெற்றிருந்தது.
அதன்மற்றுமொரு பரிணாமமாக நேற்று நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. அஸ்ரப் தாஹீர் தங்களை தாக்கியதாக கூறி இருவர் அஸ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ஏ.எச்.எம்.நிம்ரியாஸ் தெரிவிக்கும் போது,
தான் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றுபவர். மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்த என்னுடைய அடையாள அட்டையை எடுத்து கொண்டு கடமைக்கு சென்ற போது நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்திலிருந்து பிரதான வீதி வரை என்னை நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஸ்ரப் தாஹீர் அவருடைய நண்பரும் துரத்தி வந்து குழாயால் அடித்தார்கள்.
அதனால் உடல்ரீதியாக பாதிக்கப்பட்ட நான் இப்போது வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு நபரான எஸ்.எம்.நாஸிப் கருத்து தெரிவிக்கும் போது,
நிந்தவூரை சேர்ந்த நான் நேற்று ஒலுவிலில் அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பிக்கு எதிர்ப்பு தெரிவித்தமையை கவனத்தில் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்று நிந்தவூர் பிரதேச சபை தவிசாளராக இருக்கும் அஸ்ரப் தாஹீர் என்பவரும் அவருடைய நண்பர் சாதிக்கும் என்னை சாப்பிடும் போது தாக்கினார்கள்.
நான் அங்கிருந்து தப்பியோடியதும் அவர்கள் துரத்தி துரத்தி அடித்தார்கள். அது மட்டுமின்றி என்னை அச்சுறுத்தியும் பேசினார்கள். நான் என்னுடைய வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நேரடியாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஸ்ரப் தாஹீர் அவர்களை வினவியபோது குறித்த சம்பவம் திரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது தனக்கு நீங்கள் கூறுகின்ற வரை தெரியாது என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து விளக்கமளித்த நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஸ்ரப் தாஹீர்,
எங்களுடைய மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ருப் அம்பாறை மாவட்டத்தில் எங்களுடைய கட்சியை விஸ்தரித்து,புணரமைப்பு செய்கின்ற தேவைக்காக ஒலுவிலில் அமைந்துள்ள துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த போது இடம்பெற்ற சம்பவங்கள் நேற்று ஊடகங்கள் வாயிலாக வெளிவந்துவிட்டது.
எங்களுடைய மக்கள் காங்கிரசின் கொள்கைகளை ஏற்று அதிகமான மாற்றுக்கட்சி பிரமுகர்கள் எங்களுடைய கட்சியில் குழுக்குழுவாக இணைவதை பொறுத்துக்கொள்ளாமல் அரசியல் காடையர்களை அழைத்துவந்து பிரச்சினையை தோற்றுவித்தார்கள்.
நேற்றும் கடமையில் இருந்தவர்களை முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசிமின் உத்தரவின் பேரில் அழைத்துவரப்பட்டுத்தான் அந்த காடைத்தனம் நடந்தேறியது.
அதனை ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் தெளிவாக காணலாம். எனது சொந்த எரிபொருள் நிலைய ஊழியர்களிடமும் பிரச்சினைக்கு வந்தார்கள். அவர்களுக்கு எதிராக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடும் பதிவுசெய்துள்ளேன்.
இன்று நான் என்னுடைய தோட்டத்தில் ஏற்பட்ட நீர்கசிவை சரிசெய்ய சென்ற போது வீதியில் நின்று கொண்டு என்னை நோக்கி தகாத வார்த்தைகளால் பேசி வம்பிழுத்தவர்களை (நீங்கள் கூறும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள்.) துரத்திச்சென்று நிறுத்தி சில விடயங்களை பேசிய போது அவர்கள் என்னிடம் மன்னிப்பு கோரினர்.
அப்போது பிரதேச வாசிகள் அவர்கள் சிறுபிள்ளைத்தனமாக பேசிவிட்டார் என கூறி சமரசம் செய்து இருதரப்பினரையும் அனுப்பிவைத்தனர்.
நிந்தவூரில் ஒரு இராஜாங்க அமைச்சர் இருந்தும் பிரதேச சபையை கைப்பற்ற முடியாமல் போனதன் வெளிப்பாடே இந்த விடயம் என நினைக்கிறேன். என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment