சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.
எமது தென்கிழக்கு ஆசிய நாடுகளை பொறுத்தவரை இலங்கைக்கு ஒரு மதிப்பு இருந்தது. அது தான் கல்வியறிவு பெற்றவர்கள் மிகவும் கூடிய விகிதாசாரத்தில் வாழுகின்ற நாடு என்கின்ற பெருமை. கல்வியறிவிலும் மிகவும் உச்சத்தில் இருப்பவர்கள் என்று டாக்டர், என்ஜினீயர், வழக்கறிஞர் முதலான பட்டியல் நீளும். அவற்றில் வழக்கறிஞர் என்ற நிலையில் இருந்து நீதியரசர் என்கின்ற நிலைக்கு உயர்ந்த ஒரு கல்விமானாகிய நீங்கள் இப்படி பக்கா அரசியல் வாதியாக மாறுவீர்கள் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
நீங்கள் அரசியலில் நுழையும்போது எங்களைப்போன்ற எமது நாட்டுக்காக கழிவிரக்கம் கொள்ளும் ஒரு சில பேருக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. சீரழிந்து கிடக்கின்ற இனங்களுக்கிடையிலான உறவுகளை சீர்படுத்தும் ஆளுமையாகவும் அதிகாரமாகவும் உங்களை எதிர்பார்த்தோம். வடமாகாணத்தில் யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு தரப்பாரினதும் வெறித்தனமான செயற்படுகளால் மனித இனம் சந்தித்த அவலங்கள் கற்றறிந்த மனிதர் மனதில் ஆழமான வடுக்களை ஏற்படுத்தி யிருக்கும் என்றும் பதவிகள், அதிகாரங்கள் கிடைக்கும் போது நாகரீகமான செயற்பாடுகளால் காயங்கள் மாறலாம், வடுக்கள் மறையலாம் என்று காத்திருந்தோம். பார்த்திருந்தோம்.
எந்த காயத்துக்கும் மருந்திடப்படவுமில்லை, எந்த வடுக்களையும் மறைய அனுமதிக்கவுமில்லை. உங்கள் காலத்தை உங்கள் பாட்டில் கழித்துவிட்டு இன்று ஏவல் நாய்களால் கடித்துக் குதறப்படுகின்ற ஒரு சமூகத்தின் மேல் அபாண்டம் சுமத்துவது உங்களுக்கு அடுக்குமா ஐயா. உங்கள் குழந்தைகள் கடித்துக் குதறி மிகுதியாய் இருக்கின்ற இந்த சமூகத்தை அவர்களின் சொந்த வாசலுக்கே வரவிடாமல் தடுத்தவர் நீங்கள். இன்னும் தடுத்துக் கொண்டிருப்பவர். இந்த வசை உங்களுக்கு இருக்கும் பொழுதே நீங்கள் இன்னுமொரு ரத்னதேரராக மாறலாமா ஐயா.
முன்னூறு கிராமங்கள் முஸ்லீம் கிராமங்கள் ஆகியதாக கூறிய உங்களுக்கு ஒட்டு மொத்தமாக கிழக்கு மாகாணத்தில் எத்தனை கிராமங்கள் உள்ளன, என்றாவது அறிவூட்டினார்களா உங்களுக்கு விடயங்களை வழங்கியவர்கள். கண்ணால் கண்டதும் பொய் காதால் கேட்டதும் பொய், தீர விசாரிப்பது வே மெய் என்று விசாரணை மேடையில் தலைமை தாங்கியவர் நீங்கள். இரத்தின ஹிமி சொல்லியவற்றுக்கு சாட்சியங்கள், தடயங்கள், உறுதிப்படுத்தும் ஆவணங்கள் ஏதாவது கோரி அடுத்த தவணைக்கு ஒத்தி வைக்காமல் வாய்க்கு வந்த தீர்ப்பினை வழங்குவது தர்மப்படியும், சட்டப்படியும் குற்றமல்லவா மஹா பிரபு.
எனக்கு தெரிந்து கல்லோயா அபிவிருத்தி திட்டத்தின் 13ம் கிராமம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த கிராமம். ஏனென்றால் அந்த கிராமத்தில் பத்து வருடங்கள் வாழ்ந்து வளர்ந்தவன் நான். இப்போது அது நூறு விகிதம் தமிழ் கிராமம். இதற்காக நான் யாரையும் குறை கூறவில்லை. சூழ்நிலைகளின் மாற்றம் அது. இது போன்ற மனிதப் பரம்பல்கள் பூமி முழுவதும் விரவிக் கிடக்கிறது. எந்தக்கிராமமும் நானறிய பலவந்தமாக மாற்றப்பட்ட இனக்குழுமங்களின் சொந்த இடமாக மாறவில்லை. அதனை நாங்கள் கண்டது வடமாகாணத்தில் மட்டும் தான்.
அதிக விலைக்கு விற்று தங்கள் குடும்பங்களின் பொருளாதார நிலைகளை உயர்த்த நினைத்த பல பேரது கதைகள் எமக்குத் தெரியும். அது எல்லா இனத்துக்கும் பொதுவானது. அப்படி இல்லையென்றால் நான், நீங்கள் போன்ற கிழக்கானும் வடக்கானும் கொழும்பிலும் மற்றைய இடங்களிலும் வீடு வளவு வாங்க முடியுமா, சம்பந்தம் கலக்க முடியுமா. பெயர் குறிப்பிட முடியாத கிராமங்களை முன்னிறுத்தி நீங்கள் வைத்த வாதம் முதல் தவணையிலேயே நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படுவது உங்களுக்கு அவமானம் அல்லவா.
ஒன்பதினாயிரம் தமிழ் பெண்கள் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டதாக கூறுகின்றீர்கள். இதுவும் இரத்தின ஹிமி சொன்னதாக சொல்லியிருப்பது போல் ஒரு ஞாபகம். இதற்காவது சட்டப்படி சாட்சிகள், அத்தாட்சிகள். உறுதிப்படுத்தல்கள் தேடினீர்களோ தெரியவில்லை. அல்லது அப்படி நீங்கள் விசாரிக்காத பட்சத்தில் உங்களது தொழிலை சந்தேகப்படுவதனை எங்களால் நிறுத்த முடியவில்லை. விசாரிக்கத் தேவையில்லை, கூட்டத்தோடு சேர்ந்து நாமும் ஏதாவது எடுத்து விடுவோம் என்று நீங்கள் உளறி இருந்தால் பக்கா அரசியல்வாதி என்பது சரிதானே.
ஐயா நீங்கள் ஒன்றை அறிவீர்களா. இலங்கையில் வாழும் நூறு விகித முஸ்லீம் களினதும் தாய் மொழி தமிழ் என்பதை மறுக்க மாட்டீர்கள். அவர்கள் அவ்வளவு பேரும் மதம் மாறிய தமிழ் பெண்களின் வாரிசுகள் ஐயா. இதற்கு உங்களிடம் மறுப்பு இருக்காதே, ஏனய்யா மதம் மாறியவர்கள் தான் உலகத்தின் நூறு விகித முஸ்லிம்களும் என்பதனை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. நூறு அல்லது இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்து என்று பெயர் சூட்டப்பட்ட பெயரற்ற ஆதி மதத்தின் வாரிசுகள் ஆகிய உங்களைப்போன்றவர்கள். மட்டும் தான் அன்று முதல் இன்று வரை அதே மதத்தில் இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு செய்தியல்லவே. சிங்களவர் கூட பௌத்த மதத்துக்கு மாறியவர்கள் தானே.
மேலே நான் கூறிய விடயங்கள் எதுவும் உங்களுக்கு புதியவை அல்ல , புரியாதவை அல்ல என்பதனை நான் நன்கு அறிவேன். ஒரு சிறு பிள்ளை விளையாட்டினை நீங்கள் உங்கள் பாட்டுக்கு ஆடி விட்டு, வேடிக்கை பார்க்கிறீர்கள்.
இவற்றினை தேடி அதன் உண்மைத் தன்மையினை கண்டு கொள்வதற்காக கல்முனை விஜயம செய்தீர்கள். அங்கே நீங்கள் குனிந்து பார்க்கின்ற அளவு கல்வியிலும்,வயதிலும், அறிவிலும், அனுபவத்திலும் சிறியவர்களாகிய எம் இளம் செயல் வீரர்களிடம் மாலை மரியாதை, வாங்கிக் கொண்டீர்கள். அது பரவாயில்லை.
முன்னரே உங்களுக்கு நன்கு தெரிந்த பாடத்தை ஒன்றுமே தெரியாதது போல் கற்றுக் கொண்டு, கற்றுத் தந்த குழந்தைகளை மகிழ்வித்தீர்களே, அந்த பணிவினை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது ஐயா.
எங்கள் பிள்ளைகளை யானை மேல் ஏற்றி ஊர்வலம்கூட்டிச்சென்று அம்பறாத்தூணி காட்டினீர்களே , சும்மா கொன்னுட்டீங்க, போங்க.
டாக்டர் நஜிமுதீன்
0 comments:
Post a Comment