மருதமுனைக்கான 
தனியான பிரதேச செயலக
கோரிக்கையை வலியுறுத்தி
 கையெழுத்து  வேட்டை

கல்முனை மாநகர பகுதியில் அமைந்துள்ள மருதமுனைக்கு நிர்வாக ரீதியான பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஒன்றை வலியுறுத்தி பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஜும் தொழுகையை தொடர்ந்து மருதமுனை மக்களினால் கையெழுத்து வேட்டை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் வடக்கு தமிழ் பிரதேச எல்லைக்குள் உள்ள மருதமுனை, நற்பட்டிமுனை போன்ற முஸ்லிம் கிராமங்களை இணைத்து இந்தப் பிரதேச செயலக கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

மருதமுனை பகுதியில் உள்ள சகல ஜும் பள்ளிவாசல் முன்றலிலும் இந்த கையெழுத்து வேட்டை ஆரம்பமானதுடன் பிரதேச மக்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்குபற்றினர்.

சில தினங்களுக்கு முன்னர் உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவை சந்தித்து முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசிய முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினரிடம் மருதமுனை- நற்பட்டிமுனை மக்களின் தேவையாக இருக்கும் இந்த செயலகத்தை உருவாக்க அமைச்சர் வஜிர அபேவர்த்தன உடன்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குறித்த மகஜர் கையளிக்கப்பட உள்ளது.


மேலும் கல்முனை மாநகரில் அண்மைக்காலமாக சூடுபிடித்திருக்கும் சாய்ந்தமருது நகர சபை போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்வு போராட்ட வரிசையில் இன்று மருதமுனையிலும் கையெழுத்து போராட்டம் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top