இலங்கையில் நடத்தப்பட்ட
வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக
இலங்கை வந்து விசாரிக்க என்... எனும்
இந்திய தேசிய புலனாய்வு அமைப்புக்கு
இந்திய பாராளுமன்றத்தால் சிறப்பு அதிகாரம்



என்..., எனப்படும், இந்திய தேசிய புலனாய்வு அமைப்புக்கு, சிறப்பு அதிகாரங்கள் வழங்கி, இந்திய பாராளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறை வேற்றப்பட்டுள்ளதால், இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக, அந்த அமைப்பினர், இலங்கை வந்து விசாரணை நடத்த உள்ளனர்.

இதுவரை, வழக்கு பதிவு செய்ய முடியாமல் இருந்தது. இனிமேல் வழக்கு பதிவு செய்து, தேவைப்பட்டால், இலங்கையில் கைது நடவடிக்கையிலும், என்..., ஈடுபடும். கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில், ஏப்ரல் மாதம் ஒன்பது இடங்களில், பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 250பேர் கொல்லப்பட்டனர்; 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியதாக, என்.டி.ஜே., என்ற அமைப்பின் தலைவர், மற்றும் அவரது கூட்டாளிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக, இந்திய உளவு அமைப்புகளுக்கு கிடைத்த தகவல்கள், இலங்கை அரசுக்கு, முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டன. எனினும், அலட்சியமாக இருந்ததால், இலங்கையில் அப்பாவிகள் பலர் படுகொலை ஆகினர். இந்நிலையில், என்..., அமைப்பிற்கு, அதிக அதிகாரங்கள் வழங்கி, இந்திய நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, வெளிநாடுகளுக்கும் சென்று, இந்தியர்கள் தொடர்புடைய குற்றங்கள், இந்தியா மீது நடத்தப்பட உள்ள தாக்குதல்கள், அதற்கான சதி, இன்னும் பிற குற்றங்களை விசாரிக்க, என்...,வுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது.

இதுவரை, வெளிநாடுகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் இருந்த, என்...,வுக்கு, சட்ட திருத்தங்கள் மூலம், வெளிநாடுகளில் பதுங்கி இருப்போரையும் கைது செய்யும் அதிகாரம் கிடைத்துள்ளது. அதனால், இலங்கை வெடிகுண்டு தாக்குதல், அதனுடன் தொடர்புடைய இந்தியர்களின் பங்கு, தாக்குதலை நடத்தியவர்களின் இந்திய சுற்றுப்பயணம், யார் யாரை அவர்கள் சந்தித்தனர் என்பன போன்ற விபரங்களை, என்..., தீவிரமாக விசாரிக்க உள்ளது.

ஏப்ரலில் இலங்கையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததும், மே மாதம், என்..., அதிகாரிகள், இலங்கை சென்று, விசாரணை நடத்தி, இந்தியர்கள் பங்கு இருக்கிறதா என்பதை ஆராய்ந்தனர். அப்போது கிடைத்த சில தகவலின்படி, டில்லி, தமிழகம், கேரளா, பெங்களூரு போன்ற இடங்களில் பதுங்கியிருந்த, பயங்கரவாத குழுக்களின் ஆதரவாளர்கள், கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, கேரளாவைச் சேர்ந்த, ரியாஸ் (29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீரிலும், ஆதரவாளர்கள் சிலர் இருப்பதாக கூறப்படும் தகவலை, அந்த மாநில அரசு மறுத்து உள்ளது. இலங்கையின், என்.டி.ஜே., பயங்கரவாத அமைப்பின் தலைவர், சஹ்ரான் ஹாசிம், இந்தியா வந்து சென்றதும், அப்போது அவருடன் தொடர்பில் இருந்தோர் குறித்தும், என்..., இன்னும் விசாரிக்க வேண்டியுள்ளது.

சமூக வலைதளங்களில் அவருடன் தொடர்பில் இருந்த சிலரை, ஏற்கனவே கைது செய்துள்ள, என்..., விரைவில் இலங்கை வந்து, விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது. அப்போது, இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, இந்தியாவில் இருக்கும் பயங்கரவாத குழுக்களின் ஆதரவாளர்களின் பங்கு என்ன என்பது, விரிவாக தெரிய வரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top