தேர்தல்களை இலக்காகக் கொண்டே
தன் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள்
பதவிப் பெறுப்பேற்பு நிகழ்வில்
அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு



தேர்தல்களை இலக்காக கொண்டும், அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் இனவாதக் கூட்டம் என் மீது தொடர்ச்சியான குற்றாச்சாட்டுக்களை சுமத்தி, தாம் அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்த பின்னர் இன்று (30) காலை கொள்ளுப்பிட்டியில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இங்கு தொடர்ந்து உரை நிகழ்த்துகையில் மேலும் கூறியதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் என்னை தொடர்புபடுத்தி சில இனவாதிகள் பல்வேறு குற்றாச்சாட்டுக்களை சுமத்தினர். ஊடகங்களில் பிரமாண்டமான பிரசாரங்களை மேற்கொண்டனர். நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்தனர். இதனால் என் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு பொலிஸ் திணைக்களம் உயர்மட்ட பொலிஸ் குழு ஒன்றை அமைத்து குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை எனவும் பொய்யானவை எனவும் விசாரணைகளிலிருந்து வெளிப்படுத்தப்பட்டது. தெரிவுக்குழுவிலும் சாட்சியாளார்கள் இதனை மீண்டும் தெளிவுபடுத்தினர்.


அதுமாத்திரமின்றி இந்த தாக்குதலின் விளைவாக முஸ்லிம் சமூகத்தின் மீதும் கைவிரல் நீட்டப்பட்டது. இனக்கலவரம் ஒன்றிற்கு தூபமிடப்பட்டது. எனவே நாட்டில் பெரிய பிரளயம் ஒன்று ஏற்படப்போகின்ற நிலையை தவிர்க்கும் வகையிலயே முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகினர்.

முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை சரி செய்வதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நாம் நடாத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளில்  தற்போது பலன் கிடைத்ததன் காரணமாகவே அமைச்சு பொறுப்புக்களை மீண்டும் பொறுப்பேற்றோம்.

இஸ்லாம் மார்க்கம் வன்முறைகளையோ பயங்கரவாத்தையோ ஒரு போதும் ஆதரிக்கவில்லை. எமது சமூகத்தைப் பற்றிய பிழையான பார்வை ஒன்றை சிலர் விசமத்தனமாக பரப்பி வருகின்றனர். இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் முஸ்லிம்களும் அவர்களின் தலைவர்களும் நேசித்த நிறைய சம்பவங்களை  கூறமுடியும்.

நான் இந்த அமைச்சை பொறுப்பேற்ற இத்தனை வருட காலத்தில், எந்த அதிகாரியையோ எந்த அலுவலரையோ கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமாக இப்படித்தான் செய்யவேண்டும் என்று எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. அவ்வாறு செய்யவும் இல்லை. உங்கள் மனச்சாட்சிக்கு நன்கு தெரியும். இந்த அமைச்சின் கீழான அத்தனை நிறுவனங்களிலும் நடைபெறும் எல்லாச் செயற்பாடுகளும் கொடுக்கல் வாங்கல்களும் பகிரங்கத் தன்மையுடனேயே மேற்கொள்ப்படுகின்றன. என் மீது சுமத்தப்பட்ட 300ற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்களில் சுமார் 200 குற்றாச்சாட்டுக்கள் இந்த அமைச்சுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. எனினும் விசாரணைகளின் பின்னர் பெரும்பாலானவை அடிப்படையற்றதெனவும் காழ்ப்புணர்வுடன் சோடிக்கப்பட்டவை எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஊழியர்களான நீங்கள் அலுவலக நேரத்தில் வேறு விடயங்களில் கவனம் செலுத்தாது எஞ்சியுள்ள காலத்தில் மேற்கொள்ள வேண்டிய இந்த வருடத் திட்டங்களை நிறைவேற்ற உதவ வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் கடந்த காலத்தைப் போன்று இன்னும் எஞ்சி இருக்கின்ற காலங்களிலும் அமைச்சின் செயற்பாடுகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் இவ்வாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், இராஜாங்க அமைச்சர் புத்திக்க பத்திரண, அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top