ஆப்கான், ஈராக்கில் பணியாற்றிய அதிகாரியை
கொழும்பு தூதரகத்தில்
புதிய பணிக்கு அனுப்பியது அமெரிக்கா
ஆப்கானிஸ்தான், ஈராக், கொசோவோ ஆகிய மோதல் பிரதேசங்களில் பணியாற்றிய அமெரிக்க இராணுவத்தைச் சேர்ந்த லெப்.கேணல் ட்ராவிஸ் கொக்ஸ், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள லெப்.கேணல் ட்ராவிஸ் கொக்ஸ், கடந்தவாரம் இலங்கையின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைச் சந்தித்தார்.
அவருடன், பிரதி பாதுகாப்பு ஆலோசகர் கரின் கிளெய்ஸ்னரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றார்.
இரு அதிகாரிகளும் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
அமெரிக்க தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள லெப்.கேணல் ட்ராவிஸ் கொக்ஸ், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய பிராந்தியத்தில் பல்வேறு கட்டளை மற்றும் செயலக பொறுப்புக்களை வகித்தவர்.
ஆப்கானிஸ்தான், ஈராக், கொசோவோ ஆகிய இடங்களில் படை நடவடிக்கைகளில் பங்கேற்றவர். மலேசியா, இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும் பணியாற்றியவர்.
லூசியானாவின் போர்ட் போல்கில் உள்ள கூட்டு தயார்நிலை பயிற்சி மையத்தில்,இடைத்தொடர்பு மற்றும் இயங்குதன்மை பணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில் கொழும்பில் உள்ள தூதரகத்தில் புதிய பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment