வலைத்தளத்தில் உலாவ விடப்பட்ட
கோத்தாவின் மோசடி ஆவணம்

கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்க குடியுரிமை துறப்பு சான்றிதழ் என, சமூக வலைத்தளங்களில் உலாவும், ஆவணம் மோசடி செய்யப்பட்ட போலியான சான்றிதழ் என, ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமையை இழப்பது தொடர்பாக அளிக்கப்பட்ட சான்றிதழ். போல, வடிவமைக்கப்பட்ட இந்த ஆவணம், சமூக ஊடகங்களில் இன்று காலையில் இருந்து உலா வந்து கொண்டிருக்கிறது.

இந்த மோசடி ஆவணத்தை, கோத்தாபய ராஜபக்வுக்கு சார்பாக ஜனாதிபதி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் கட்சிகளுக்கு நெருக்கமானவர்களே சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

அந்த சான்றிதழில், கோத்தாபய ராஜபக், 2003 மார்ச் 13ஆம் திகதி அமெரிக்க குடியுரிமையைப் பெற்றதாகவும், 2019 ஜூலை 05ஆம் திகதி  அமெரிக்க தூதரகத்தில் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட்டார் எனவும், குறிப்பிடப்பட்டுள்ளது,

எனினும், அந்த சான்றிதழில் குத்தப்பட்டுள்ள சிவப்பு முத்திரையில் 2019 ஜூலை 26 என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கொழும்பு அமெரிக்க தூதரகத்தினால் அங்கீகாரிக்கப்பட்டது என்று, ஜோல் பிபீல்ட் என்ற அமெரிக்க அதிகாரியின் ஒப்பமும் இடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கோத்தாபய ராஜபக், ஜூலை 05ஆம் திகதி இலங்கையில் இருக்கவில்லை. இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பின்னர், அவர் அப்போது சிங்கப்பூரில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுக் கொண்ட திகதி என இந்த சான்றிதழில் கூறப்பட்டுள்ளதும் தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.

அவர் 2003 மார்ச் மாதம் அமெரிக்க குடியுரிமையைப் பெறவில்லை என்றும், 2003 ஜனவரி 31ஆம் திகதியே அமெரிக்க குடியுரிமையை பெற்றார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது கடவுச்சீட்டுத் தொடர்பாக இந்த மோசடி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களும் தவறானவையாகும். கோத்தாபய ராஜபக்வின் அமெரிக்க கடவுச்சீட்டு 2012 ஒக்ரோபர் மாதம் விநியோகிக்கப்பட்டதாக அதிகாரபூர்வ பதிவுகள் கூறுகின்றன. ஆனால், மோசடி சான்றிதழில் 2012 ஜூலையில் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விக்கிபீடியாவில் உள்ள மாதிரி சான்றிதழை மாற்றியமைத்தே இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. பரகுவேயில் உள்ள தூதரக அதிகாரியான ஜோல் பிபீல்ட் என்பவரின் பெயரும் கையெழுத்துமே, இந்த மோசடி ஆவணத்தில் காணப்படுகிறது.

மோசடி  ஆவணத்தில் கோத்தாவின் கடவுச்சீட்டு இலக்கம் மற்றும் வழங்கப்பட்ட திகதி என்பன, விக்கிபீடியாவில் உள்ள மாதிரிச் சான்றிதழில் உள்ளபடியே மாற்றப்படாமல் இருப்பதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top