74 வயதில் இரட்டை குழந்தைகள்
பெற்ற ஆந்திர மூதாட்டி:
கின்னஸ் சாதனை
  
ஆந்திராவில் 74 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளை இன்று பெற்றெடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தக்‌ஷராமம் பகுதியை சேர்ந்தவர் ராஜா ராவ். இவருக்கும் மங்கம்மா (74) என்பவருக்கும் 1962-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இதனால்  ஒரு குழந்தையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் நீண்டகாலமாக பல்வேறு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்றுவந்தனர். ஆனால் சிகிச்சையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

முயற்சியை கைவிடாத மங்கம்மா தம்பதியினர் 2018-ம் ஆண்டு நவம்பரில் குண்டூரில் உள்ள அகல்யா மருத்துவமனைக்கு வந்தனர்.  மருத்துவமனையின் டாக்டர் ஷானக்கயலா அருணா இந்த சவாலான சாதனையை ஏற்றுக்கொண்டார். மங்கம்மாவின் உடல் நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள் குழந்தை பெற்றெடுப்பதற்கான முழு உடல் தகுதி பெற்றிருப்பதை உணர்ந்தனர். இதையடுத்து, ஜனவரி மாதம் ஐவிஎஃப் மூலம் செயற்கை கருவூட்டல் நிகழ்த்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மங்கம்மா தனது 74-வது வயதில் சிசேரியன் முறையில் இரட்டை பெண் குழந்தைகளை இன்று பெற்றெடுத்தார். தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தனது 74-வது வயதில் இரட்டை  குழந்தைகளை பெற்றெடுத்ததன் மூலம் அதிக வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண் என்ற கின்னஸ் சாதனையை மங்கம்மா நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக 2006-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் தனது 66-வது வயதில் குழந்தை பெற்றதே கின்னஸ் சாதனையாக இருந்துவந்தது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top