பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப
அமெரிக்காதான் காரணம்:
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றச்சாட்டு
பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப அமெரிக்காவே காரணம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் தனது மண்ணில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக கூறி அந்நாட்டுக்கு வழங்கி வந்த ராணுவ நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தியது.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்த பாகிஸ்தான் தங்கள் நாட்டில் பயங்கரவாத இயக்கங்கள் இல்லை என கூறிவந்தது.
பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்ப அமெரிக்காவே முழு காரணம் என இம்ரான்கான் குற்றம் சாட்டி உள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவர் கூறியதாவது:-
1980-களில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து இருந்த சோவியத்திற்கு எதிராக புனித போர் நடத்த நாங்கள் ஆயுத குழுக்களுக்கு பயிற்சி அளித்தோம். அவர்களுக்கு பயிற்சி அளிக்க அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. எங்களுக்கு நிதியுதவி அளித்து வந்தது.
தற்போது, பாகிஸ்தானில் உள்ள அதே குழுக்கள் ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்துவதால் அவர்களை பயங்கரவாதிகள் என்று, அமெரிக்கா கூறுகிறது. மேலும் அவர்களுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது.
இதனால் பயங்கரவாதிகளின் கோபம் பாகிஸ்தான் பக்கம் திரும்பி உள்ளது. பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் 70,000 பேரையும், 100 மில்லியன் டாலர் பொருளாதாரத்தையும் இழந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் தோற்கடிக்கப்படுவதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என அமெரிக்கா பழி சுமத்துகிறது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் நடுநிலையாக செயல்படவே பாகிஸ்தான் நினைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இம்ரான்கான் அடுத்த வாரம் அமெரிக்கா செல்லவிருக்கும் நிலையில், அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
0 comments:
Post a Comment