வீடு வசதி வாய்ப்புக்கள் இல்லாமல்
முஸ்லிம் சமூகத்தில் குமர் பெண்கள்
பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
இது குறித்து தலைமைத்துவம் சிந்தித்து
அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளட்டும்.
இது முஸ்லிம் சமூகத்தின் ஆதங்கம்


முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக குறிப்பாக சமூகத்திலுள்ள ஏழை, எளிய மக்களின் விடிவுக்காக மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் சிந்தித்து கட்சி ஒன்றை உருவாக்கினார்கள்.
இக்கட்சியை வளர்த்தெடுப்பதற்காக ஆரம்ப காலத்தில் அன்னார் எதிர் நோக்கிய இன்னல்கள் சொல்லமுடியாதவைகள். மழை, வெயில், நித்திரை என்று பாராது பாடுபட்டு கட்சி செலவுக்காக உண்டியல் கூட ஏந்தி பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை, மருதமுனை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் கட்சியை வளர்த்தெடுப்பதற்காக பல கஸ்டங்களுக்கு மத்தியில் மேடைகள் அமைக்கப்பட்டு தொடராக  கூட்டங்கள் நடத்தப்பட்டன.  

அன்று மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் ஒரே நாளில் பல கூட்டங்களில் மக்கள் மத்தியில் கட்சியை வளர்ப்பதற்காக பேசிக்கொண்டிருப்பார்.  மாலையில் தொடங்கப்படுகின்ற  கூட்டங்கள்  அதிகாலை 2.00 - 3.00 மணி வரையிலும் செல்லும்.அதுவரையும் மக்களும் எமது சமூகத்திற்கான கட்சி உருவாகி வளர்ந்து சமூகத்திற்கு உதவவேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பிலும் அவாவுடனும் எந்த அலுப்புமின்றி அப்படியே பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள் 
கட்சியை வளர்த்தெடுக்கும் நோக்கமாக அல்லாஹ்வின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு முஸ்லிம் சமூகத்திடம் நோன்பு பிடித்து அல்லாஹ்விடம் துஆ (பிரார்த்தனை) செய்யும்படி அன்று மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப், சேகு இஸ்ஸதீன் போன்றோர் வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருந்தனர்.

வசதிகள் இல்லாத ஏழை, எளிய மக்களும் திருமணம் முடிப்பதற்கு வயது வந்த பெண் பிள்ளைகளைக் கொண்டிருந்த வீடு வசதிகள் மற்றும் பணம் இல்லாத குடும்பத்தவர்கள் மற்றும்  அரசியலில் பாதிக்கப்பட்ட மக்களும் தமது சமூகத்திற்கென ஒரு கட்சி உருவாகி விமோசனம் கிடைக்கும் என நம்பி நோன்பு பிடித்து அல்லாஹ்விடம் அழுது துஆ (பிரார்த்தனை) செய்து வந்தனர். சில தாய்மார்கள் தமது முந்தானையை உயர்த்திப் பிடித்து கட்சி வளர வேண்டும் என  துஆ கேட்டதை எம்மில் பலர் நேரடியாகவே கண்டிருக்க முடியும்.

இப்படி சமூதாயத்தின் எழுர்ச்சிக்காக நோன்பு பிடித்து அல்லாஹ்விடம் பிரார்த்தித்து மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால், சமூகத்தின் விடிவுக்காக வளர்தெடுத்த கட்சியைக் கொண்டு அதிகாரங்களைப் பெற்றவர்கள் அல்லாஹ்வை மறந்தவர்களாக நபி (ஸல்) அவர்களின் போதனைகளை மறந்துவிட்டவர்களாக ஏன் கட்சியை வளர்தெடுப்பதற்காக நோன்பு பிடித்து அழுது பிரார்த்தித்த மக்களை மறந்தவர்களாக தற்போது ஆடம்பரமாக செயல்படுவது குறித்து மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் சமூகத்தில் வீடு வசதிகள் இன்றி வயதேறிய எத்தனையோ  குமர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் சமூகத்திற்காக உருவாக்கப்பட்ட குறித்து கட்சியின் தற்போதய தலைமைத்துவம் தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாகவும் டாம்பிகமாகவும் செய்ய ஆரம்பிக்கும்போது அல்லாஹ்வை நினைத்து சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த குமர்களையும் அவர்களுக்கு எவ்வாறு எம்மால் உதவமுடியும் என்று சிந்தித்துப் பார்த்திருக்கவேண்டும்.

சமூகத்தில் இரக்கமுள்ள சமூதாய உயர்ச்சியில் சிந்தனையுள்ள ஒரு முஸ்லிம் தலைவனாக இருப்பவர் தனது மகளின் இந்த ஆடம்பர செலவுகளை தவிர்த்து அந்த செலவுகளைக் கொண்டு தனது மகளின் திருமணத்தின் பெயரால்  ஒவ்வொரு முஸ்லிம் ஊர்களிலும் திருமணம் முடிப்பதற்கு வசதியில்லாத குமர் பெண்களைத் தெரிவு செய்து  வீடுகளை அமைத்துக் கொடுத்து உதவியிருக்கமுடியும்.

இத்திட்டத்திற்கென தன்னால் முடியுமான உதவிகளைச்செய்து விட்டு  பணம் படைத்தவர்களிடம் இதிட்டத்திற்கென உதவியை தலைமைத்துவம் கேட்டிருந்தால் கூட இதற்கு பலர் முன் வந்திருப்பார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் ஏழை,எளிய மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்த பின்னர் அந்த மக்களை மறந்தவர்களாக இந்தியாவிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் இங்கு அழைக்கப்பட்டு ஆடம்பர ஹொட்டல்களில் தங்கவைத்தும், உணவு வழங்கியும்  நாட்டிலுள்ள அரசியல் தலைவர்களை அழைத்து ஆடம்பரமாக திருமணம் செய்யும் போது தனது தலைமைத்துவத்திற்குள்ளிருக்கும் சமூகத்தில் திருமணம் முடிப்பதற்கு வசதி வாய்ப்புக்கள் இல்லாத எத்தனையோ குமர் பெண்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து சிந்தித்து ஏதுவான நடவடிக்கை எடுத்திருந்தால் அல்லாஹ்வுக்கு பொருத்தமானதாக இருந்திருக்கும்.

தனது தலைமைத்துவத்திற்குள் உள்ள முஸ்லிம் சமூகத்தில் ஏக்கத்துடனும் பெருமூச்சுக்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த குமர்கள் குறித்தும் சமூகத்தின் தலைமைத்துவம் அல்லாஹ்வுக்கு பயந்து சிந்தித்து எதிர்காலத்திலாவது நடவடிக்கை எடுக்கட்டும்.
ஈமான் கொண்டவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளட்டும்.
இது முஸ்லிம் சமூகத்தின் ஆதங்கம்













0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top