சாய்ந்தமருது, காரைதீவு கல்விக் கோட்டத்திலுள்ள

முஸ்லிம் பாடசாலைகள்
மாணவர்கள் வருகைதராததால்
இன்றும் இயங்கவில்லை
மாணவர்கள் போராட்டம் நீடிக்கிறது

சாய்ந்தமருது மற்றும் காரைதீவு கல்விக் கோட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் இன்றும் (2019.09.10 ஆம் திகதி செவ்வாய்கிழமை) மாணவர்கள் வருகைதராதன் காரணமாக இயங்கவில்லை.
மாணவர்கள் பாடசாலைக்கு வருகைதராதபோதும் இங்குள்ள பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் கடமைக்கு வருகைதந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

சுனாமியால் பாதிக்கப்பட்டதும் மீனவ சமூகத்தவர்களின் பிள்ளைகளுக்குமானதுமான சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திற்கென NSBS திட்டத்தில் கல்வி அமைச்சினால் ஒரு கோடியே 90 இலட்சம் செலவில் வழங்கப்பட்ட கட்டிடம் திட்டமிட்டு கல்முனை வலய கல்வி பணிப்பாளர், மாகாண கல்வி பணிப்பாளர், கல்முனை கல்வி வலயத்தில் கடமைபுரியும் பொறியியலாளர் ஆகியோரின் கூட்டுச் சதியால் வேறு பிரதேசத்திலுள்ள பாடசாலைக்கு இடமாற்றப்பட்டதாகத் தெரிவித்தும் இவர்களி்ன் இச் செயல்பாட்டைக் கண்டித்தும் சாய்ந்தமருது மற்றும் காரைதீவு கல்விக் கோட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்குச்செல்லாது வகுப்புக்களை பகிஸ்கரித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது விடயத்தில் விடயங்களுக்கு பொறுப்பான சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளும், இப்பிரதேச அரசியல்வாதிகளும் கண்மூடி மெளனித்தவர்களாக இருப்பது குறித்து பெற்றோர்களும், நலன் விரும்பிகளும் ஆத்திரத்தை தெரிவித்து வருகின்றனர்.

சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய மானவர்களின் கல்வி நடவடிக்கைக்கு கல்வி அதிகாரிகள் செய்துள்ள துரோகத்தை கண்டித்து சாய்ந்தமருது கல்விக் கோட்டத்திலுள்ள ஏனைய பாடசாலைகளான அல்-ஹிலால் வித்தியாலயம், மல்ஹரூஸ் ஷம்ஸ் வித்தியாலயம், அல் கமறூன் வித்தியாலயம், அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை(GMMS), றியாழுல் ஜன்னாஹ் வித்தியாலயம், லீடர் அஷ்ரப் வித்தியாலயம், எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் கல்முனை ஸாஹிறாக் கல்லூரி ஆகியனவும் காரைதீவு கல்விக் கோட்டத்தைச் சேர்ந்த அல்- ஹுஸைன் வித்தியாலயம், ஸபீனா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மானவர்கள் இவ்வாறு வகுப்புக்களை பகிஸ்கரித்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
நேற்று ஆரம்பிக்கப்பட்ட மாணவர்களின் இப்போராட்டம் தீர்வு கிடைக்கும்வரை தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.
 மாணவர்களின் நேற்றைய போராட்டத்தில் பின் வரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷங்க்ளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

** நல்லாட்சி அரசாங்கத்தின் கல்வித் திட்டத்தை சீர்குலைக்காதே!
** அரசே மாணவர்களின் துயர் துடை.
** பொறியியலாளரே! பொறுக்கி வேலை செய்யாதே!,
** அதிகாரிகளே! மாணவர்களின் கல்வியைச் சீரழிக்காதே.
** அரசே! எங்கள் அபிவிருத்தியை மீளப் பெற்றுத்தா.
** மாகாணக் கல்விப் பணிப்பாளரே! எங்கள் கல்வி அபிவிருத்தியை தடை செய்யாதே.
** கல்வி அதிகாரிகளே! மாணவர்களுக்காகவே கல்வி அதன் தாகத்தை தனியவிடு.
** கல்வி அமைச்சரே!அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தை உயிரோட்டமாக்கு.

Type-11 பாடசாலையான சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலய கட்டிடம் NSBSதிட்டத்தில் இல்லாத வேறு பிரதேசத்திலுள்ள1AB தர பாடசாலைக்கு எப்படி மத்திய கல்வி அமைச்சின் அனுமதி இன்றி மாகாணக் அதிகாரிகளால் மாற்றி வழங்கப்பட்டது என்றும் கேள்வி எழுப்பப்படுகின்றது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top