இலஞ்சம் பெற்ற சமுர்த்தி உத்தியோகத்தருக்கு
21ஆம் திகதி வரை விளக்கமறியல்



திருகோணமலை - குச்சவெளி பகுதியில் 8500 ரூபாய் பணத்தை இலஞ்சமாக வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் இன்று சந்தேகநபரை முன்னிலைப்படுத்திய போதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி உரித்து பத்திரம் வழங்குவதாக கூறி இரு பயனாளிகளிடம் பணத்தை வாங்கும்போது குறித்தநபர் இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய டேவிட் மில்ரோய் ராஜன் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குச்சவெளி - காசிம் நகர் பகுதியைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகள் செய்த முறைப்பாட்டையடுத்து இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு வருகை தந்ததாகவும், சமுர்த்தி பயனாளிகள் தொலைபேசி மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர் வரவழைத்து பணத்தை கொடுக்கும் போது கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் ஏற்கனவே குச்சவெளி பிரதேச செயலாளருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதையடுத்து பிரதேச செயலாளர் இலஞ்சம் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் ஏற்கனவே விளக்கி உள்ளதாகவும் பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், இவர் ஏற்கனவே திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகம் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகங்களில் கடமையாற்றி வந்ததாகவும் அங்கும் இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றமையினால் குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு மாற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top