காதி நீதிமன்ற கட்டமைப்பை மாற்றும் சட்டமூலம்
.அத்துரலியே ரதன தேரரால்
பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

காதி நீதிபதிகள் வழக்கு விசாரணைக்காக
வரும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு
உட்படுத்த முயற்சித்த சில சம்பவங்கள்
பதிவாகியுள்ளதாகவும் தெரிவிப்பு


காதி நீதிமன்றங்களின் நீதிபதிகளாக செயற்படும் சிலர் வழக்கு விசாரணைக்காக முன்னிலையாகும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த சில சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக .அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

காதி நீதிமன்றம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

காதி நீதிமன்ற கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட இந்த சட்டமூலம் அத்துரலியே ரதன தேரர் உள்ளிட்ட மகா சங்கரத்தினரால் பாராளுமன்ற சட்டமூலம் பிரிவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும்  இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளில் 90 ஆயிரம் தமிழ், சிங்களவர்கள் முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வலுக்கட்டாயமாக இவையெல்லாம் இடம்பெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார்.

முஸ்லிம் காதி சட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருமண சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் தனிநபர் பிரேரணை ஒன்றினையும் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ளதாவும் அவர் கூறினார்.


 அவர் மேலும் கூறுகையில்,
திருமண சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர தனி நபர் யோசனை ஒன்றினை பாராளுமன்றத்திற்க்கு கொண்டு வரவுள்ளேன். இன்று (நேற்று) நான் பாராளுமன்றத்தில் இதனை சமர்ப்பித்துள்ளேன்.

இன்று திருமண சட்டம் மூலமாக பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளில் 90 ஆயிரம் தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம் முறைமைக்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர்.

 வலுக்கட்டாயமாக இவையெல்லாம் இடம்பெற்றுள்ளது. இதில் 97 வீதம் வற்புறுத்தல் என்றே பதிவாகியுள்ளது.

 இலங்கையில் சகல பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் உள்ளன. 13 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலைமைகள் உள்ளன. இது இலங்கையில் பாரிய சமூக பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.

இவ்வாறு மாற்றுத் திருமணம் செய்துள்ளவர்கள் மீண்டும் விவாகரத்தை செய்துகொண்ட நேரங்களிலும் காதி சட்டத்தின் பிரகாரம் பிள்ளைகள் முஸ்லிம் சமூகத்தில் தடுத்து வைக்கப்படுகின்றனர். ஆகவே காதி நீதிமன்றம் இன்று முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பாரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.

அதேபோல் தமிழ்சிங்கள மக்களின் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. காதி நீதிபதிகள் என கூறிக்கொண்டு சட்ட அறிவு இல்லாத முஸ்லிம் நபர்கள் பலர் செயற்பட்டு வருவதாக முறைப்பாடுகள் முஸ்லிம் சமூகத்தில் இருந்தே கிடைக்கப் பெற்றுள்ளன. ஆகவே இது பாரதூரமான விடயமாகும். முஸ்லிம் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூகத்தில் உள்ள அச்சம் காரணமாக வெளியில் கூறாது உள்ளனர்.
இலங்கையில் 17 வயது வரையில் கட்டாய கல்வி அவசியம். இவற்றை மீறி இந்த காதி சட்டம் செயற்பட்டு வருகின்றது.

 காதி நீதிமன்றங்கள் இயங்குவதற்கும் அப்பால் பொதுவான சட்டத்தில் அனைவரையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். காதி சட்டம் முற்று முழுதாக ஆண்களின் ஆதிக்கத்தில் மட்டுமே இயங்குகின்றது.

காதி நீதிமன்றத்தில் நியாயம் கேட்டுச் செல்லும் பெண்களுக்கு பாலியல் இலஞ்சம் கேட்கும் நிலைமை உள்ளதாக முறைப்பாடுகள் உள்ளன. ஆதாரத்துடன் நாம் இவற்றை நிருபிக்க முடியும். ஆகவே அனைவருக்கும் ஒரு சட்டம் இயங்க வேண்டும். கற்ற முஸ்லிம் சமூகம் நிச்சயமாக இதனை ஏற்றுக்கொள்வார்கள்.

 இப்போது நாம் கொண்டுவரும் சட்டத்தை சகல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் முன்வைக்கவுள்ளோம்.

ஜனாதிபதியாக வருபவர்கள் இதனை தமது முதல் காரணியாக கருதி நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வார்கள் என நம்புகின்றோம் எனவும் அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top