ஜனாதிபதி தேர்தலை
இரத்து செய்யுமாறு கோரி
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் காலி மேயர் மெத்சிறி டி சில்வா குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 6 வருட பதவிக்காலத்திற்கு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இருக்கையில் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் 5 வருடங்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான வேட்புமனுத்தாக்கல் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் இந்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றது என உத்தரவிடுமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்காக 7 ஆம் திகதி நடைபெறவுள்ள வேட்புமனு தாக்கலை இடைநிறுத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment