சீனாவில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய கப்பல் விபத்து

400-க்கும் மேற்பட்டோர் மாயம்; 5 பேர் பலி, 12 பேர் மீட்பு

மூழ்கிய கப்பலில் இருந்து மூதாட்டியை மீட்கும் வீரர்கள்

சீனாவின் யாங்சே ஆற்றில் புயல் காரணமாக,  சுற்றுலா கப்பல் 458 பேருடன் மூழ்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 5 பேர் பலியாகினர்; நீரில் மூழ்கி காணாமபோன மற்றவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

"ஈஸ்டன் ஸ்டார்' என்னும் சுற்றுலா கப்பல் 406 பயணிகள், 52 கப்பல் பணியாளர்களுடன் கிழக்கு சீனாவின் நான்ஜிங் நகரிலிருந்து, கோங்குங் நகருக்கு கடந்த வியாழக்கிழமை புறப்பட்டது.

 இந்தக் கப்பல், திங்கள்கிழமை இரவு 9:30 மணியளவில் (உள்ளூர் நேரப்படி), ஹப்பி மாகாணத்துக்குள்பட்ட ஜியான்லி பகுதியில், 6,300 கி.மீ. நீளமுள்ள யாங்சே ஆற்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கியது. ஆற்றில் 15 மீட்டர் ஆழத்துக்கு தண்ணீர் இருந்ததால், கப்பலில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் நீரில் மூழ்கி மாயமாகினர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
 இந்த விபத்துக்கான சரியான காரணம் உடனடியாக தெரியவில்லையன்றாலும், புயல் காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக, உயிர் தப்பிய கப்பலின் கேட்பனும், தலைமை பொறியாளரும் தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து யுயாங்கில் உள்ள கடற்படை மீட்பு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "தாங்கள் இக்கட்டான சூழலில் சிக்கி உள்ளது குறித்து, கப்பல் கேப்டன் எங்களுக்கு தகவல் தெரிவிக்கக்கூட நேரம் இல்லாதப்படி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது' என்று கூறியுள்ளார்.
 இதுகுறித்து சீனாவின் கடற்படை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது:
 தீயணைப்புத் துறையினர், பொலிஸார் ஆகியோருடன் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பணியில், 1,840 கடற்படை வீரர்கள், 1,600 பொலிஸார், 1,000 பொதுமக்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக 36 கப்பல்களும், 117 படகுகளும் மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. கப்பலுக்குள்ளும், நீரில் மூழ்கியும் உயிருக்கு போராடிய 12 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்; 5 பேரின் உடல்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. உயிர் தப்பியவர்கள் சிகிச்சைக்காக ஹப்பியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 "ஈஸ்டன் ஸ்டார்' கப்பலில் பயணித்த சுற்றுலா பயணிகளில் பெரும்பாலோர் 60 முதல் 70 வயதுக்குள்பட்டவர்கள் என்பதும், அவர்களில் பெரும்பாலோர் ஹாங்காய், ஜியாங்சூ பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது, சீனாவில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய கப்பல் விபத்தாக கருதப்படுகிறது.  






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top