ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லையாம்
பிரிட்டன் வரலாற்று நிபுணரின் கருத்து


இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் நாஜி ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது எனவும், அவர் தனது மனைவியுடன் ஜெர்மனியிருந்து தப்பி விட்டதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்று நிபுணர் ஜெரார்டு வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டுப் படைகளிடம் ஜெர்மனி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தனது மனைவி இவா பிரானுடன் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாகத்தான்  கூறப்படுகிறது.
எதிரிகளின் கைகளில் அவர்களது உடல்கள் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, அவை உடனடியாக தீயிட்டுக் கொளுத்தப்பட்டதாகவும் இதுவரை தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், வரலாற்றில் கூறப்படும் இந்தச் சம்பவம் உண்மைக்குப் புறம்பானது என்று வரலாற்று நிபுணர் ஜெரார்டு வில்லியம்ஸ் தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
 ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவரது பதுங்கு குழியில் இரண்டு பேர் உயிரிழந்ததும், உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதும் உண்மையாக இருக்கலாம்.
 ஆனால், அந்த இரு உடல்களும் ஹிட்லர், இவா பிரானுடையது கிடையாது. அவர்களைப் போல் தோற்றம் கொண்ட இருவரை படுகொலை செய்து, அந்த உடல்களைத்தான் நாஜிக்கள் எரித்துள்ளனர். உண்மையான ஹிட்லரும், இவா பிரானும் உலகின் கண்களில் மண்ணை தூவிவிட்டு ஜெர்மனியிலிருந்து தப்பிவிட்டார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.
 ஹிட்லரின் உதவியாளர் மார்டின் பார்மனின் யோசனைப்படி, ஹிட்லர்-இவா பிரான் தற்கொலை நாடகம் அரங்கேற்றப்பட்டது.
 ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறினால் அதை உலகம் நம்பிவிடும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அந்த நாடகத்தை உண்மையென அனைவரும் நம்பி வருகின்றனர். ஹிட்லர் ஒளிந்திருந்த பதுங்கு குழியைக் கைப்பற்றிய ரஷியப் படையினர், அவரது உடலைக் கண்டெடுத்ததாக 1945-ஆம் ஆண்டே அறிவிக்காதது சிந்திக்க வேண்டிய விஷயம்.  பல ஆண்டுகள் கழித்து 1968-ஆம் ஆண்டுதான் ஹிட்லரின் உடலையும், இவாவின் உடலையும் கண்டெடுத்ததாக ரஷியர்கள் அறிவித்தனர்.இது துளியும் நம்பும்படியாக இல்லை.

 ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகும், அமெரிக்க உளவுத் துறையினர் உலகம் முழுவதும் அவரை வலை வீசித் தேடிக் கொண்டிருந்ததற்கு இதுதான் காரணம் என்று தெரிவித்துள்ளார்  ஜெரார்டு வில்லியம்ஸ்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top