ஆடுகளை விற்று கழிப்பறை
கட்டிய 104 வயது மூதாட்டி!
காலில் விழுந்து, ஆசி
பெற்ற இந்திய பிரதமர் மோடி!!
தன் வீட்டிலிருந்த ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய 104 வயது மூதாட்டியை இந்தியப் பிரதமர் மோடி நேரில் கெளரவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவிலுள்ள சத்தீஸ்கரில் கிராமங்களை நவீனமயமாக்கும் "ரூர்பன்' திட்டத்தை இந்தியப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.அப்போது, தூய்மை இந்தியா திட்டத்தில் சிறப்பாகப் பங்களிக்க பலரை அவர் கெளரவித்தார்.
இவர்களில் தாம்தாரி மாவட்டத்தைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி குன்வர் பாய் குறிப்பிடத்தக்கவர். கழிப்பறையை பயன்படுத்தாத குக்கிராமத்தைச் சேர்ந்த இந்த மூதாட்டி தன்னிடம் இருந்த 8 ஆடுகளையும் விற்று தனது வீட்டில் இரு கழிப்பறைகளைக் கட்டினார். மேலும், தனது கிராம மக்களிடம் கழிப்பறை கட்ட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகிறார்.
அவரை சால்வை அணிவித்து கெளரவித்த மோடி பேசியதாவது:
சத்தீஸ்கரில் ஒரு குக்கிராமத்தில் வசித்து வரும் இந்த மூதாட்டி தொலைக்காட்சி பார்ப்பது இல்லை; செய்தித்தாள்களையும் வாசிப்பது இல்லை. எனினும், துய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை கட்ட வேண்டும் என்ற தகவல் அவரை எப்படியோ சென்றடைந்துள்ளது. நாடு மாற்றமடைந்து வருகிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இவர் அனைவருக்கும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
ஊடகங்களுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நீங்கள் என்னைப் பற்றி அதிகம் செய்தி வெளியிட வேண்டாம். இந்த மூதாட்டி குறித்து செய்தி வெளியிட்டு, அவர் செய்துள்ள நற்செயலை தேசம் அறியச் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார் இந்தியப் பிரதமர்
மோடி.
அந்த மூதாட்டியின் காலில் விழுந்து, மோடி ஆசி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.