என்றும் இல்லாத அளவுக்கு

கடல் நீர்மட்டம் உயர்வு



தொழில் புரட்சியால் புவியின் வெப்பம் அதிகரித்ததன் காரணமாக, கடந்த 27 நூற்றாண்டுகளில் இல்லாத வகையில் கடந்த நூற்றாண்டில் கடலின் நீர்மட்டம் 14 செ.மீ. அதிகரித்திருப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அமெரிக்காவின் ரட்கர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராபர்ட் காப் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள், அந்த நாட்டின் தேசிய அறிவியல் அகாதெமியின் இதழில் வெளியிடப்பட்டது.
 இந்த ஆய்வு குறித்து ராபர்ட் காப் கூறியிருப்பதாவது:
 இரண்டரை ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட புதிய புள்ளியியல் பகுப்பாய்வு முறை மூலம், பல்வேறு காலகட்டங்களில் பூமியின் வெப்பம் மற்றும் கடல் மட்ட உயரம் ஆகியவை கணக்கிடப்பட்டன.
 அதன்படி, 1900 முதல் 2000-ஆம் ஆண்டு வரை மட்டும் கடல் நீர்மட்டம் 14 செ.மீ. அதிகரித்துள்ளது. இதற்கு மனிதர்களால் ஏற்பட்ட புவி வெப்பமாதலே காரணம்.
 பூமியின் வெப்பம் அதிகரித்திருக்காவிட்டால் 20-ஆம் நூற்றாண்டில் கடல் நீர்மட்டம் 7 செ.மீ.க்கும் குறைவாகவே அதிகரித்திருக்கும்.
 கடந்த 3,000 ஆண்டு அளவில் நோக்கும்போது, 20-ஆம் நூற்றாண்டில்தான் கடல் நீர்மட்டம் அபரிமிதமான அளவு உயர்ந்திருக்கிறது.
 1000-ஆவது ஆண்டு முதல் 1400-ஆவது ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பூமியின் வெப்பம் 0.2 டிகிரி செல்ஷியஸ் குறைந்தது.
 இவ்வளவு குறைந்த வெப்ப நிலை மாற்றத்திலும், வியக்கத்தக்க வகையில் கடல் நீர்மட்டம் 8 செ.மீ. குறைந்தது.

 பூமியின் சராசரி வெப்ப நிலை, 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்ததைவிட தற்போது 1 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது என்று அவர். தெரிவித்துள்ளார்.  

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top