மருத்துவர்கள் முடிந்தால் வீதிக்கு இறங்கிப் போராடிப் பாருங்கள்
அதற்கு எதிரான போராட்டங்களுக்கு நாங்களும் தயார்
பிரதமர் கடுமையான தொனியில் எச்சரிக்கை !
மருத்துவர்கள் முடிந்தால் வேலைநிறுத்தம் அல்லது வீதிக்கு இறங்கிப் போராடிப் பாருங்கள். அதற்கு எதிரான போராட்டங்களுக்கு நாங்களும் தயார். அதன்பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று அதன்போது பார்த்துக் கொள்ள முடியும். நோயாளிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையிலான மருத்துவர்களின் வேலைநிறுத்தங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையான தொனியில் எச்சரித்துள்ளார்.
அரசாங்க மருத்துவர் சங்கத்தின் பிரதிநிதிகள் தாம் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது மருத்துவர் சங்கத்துக்கு எதிரான பொலிஸ் விசாரணை மற்றும் இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம் என்பன குறித்து மருத்துவர் சங்கத்தினர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அவற்றுக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப் போவதாகவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடுமையாக கோபமுற்று ஆவேசமடைந்துள்ளார். அதனையடுத்து மருத்துவர் சங்கப் பிரதிநிதிகள் பிரதமரிடம் கடுமையாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளனர்.
உங்களால் முடிந்தால் வேலைநிறுத்தம் அல்லது வீதிக்கு இறங்கிப் போராடிப் பாருங்கள். அதற்கு எதிரான போராட்டங்களுக்கு நாங்களும் தயார். அதன்பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்று அதன்போது பார்த்துக் கொள்ள முடியும்.
இனிவரும் காலங்களில் நோயாளிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் மருத்துவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசமருத்துவர் சங்கத்துக்கு அனைத்து மருத்துவர்களின் ஆதரவும் இல்லை என்பதும் உங்களுடன் ஒருசிலர் மட்டுமே இருப்பதும் எங்களுக்குத் தெரியும்.
அதிலும் சங்கத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ராஜபக்ஸ ஆதரவாளர்கள் மற்றும் அவர்களின் அனுதாபிகள் என்பதும் எமக்குத் தெரியும்.
அதே நேரம் அரசாங்கத்தின் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்துவது அரச மருத்துவர் சங்கத்தின் பணி இல்லை.
இவற்றுக்கு எதிராகசெயற்பட மருத்துவர்களுக்கு அதிகாரமில்லை. அதே நேரம் மருத்துவர் சங்கத்துக்கு எதிரான பொலிஸ் விசாரணைக்கும் அரசாங்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டுவதும் அபத்தமானது.
மருத்துவர் சேவை தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் ஒன்றை மருத்துவர் சங்கத்தின் ஆண்டு இதழில் வெளியிட்டுள்ளீர்கள்.
அது இதுவரை சட்டமாக்கப்படவில்லை. அவ்வாறான நிலையில் அதனை சட்டமாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே அதனை வெளியிட்டதும் தவறு. இதற்கு எதிராகவே பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் அரசாங்கம் தலையிடாது. தவறு செய்திருந்தால் யாரையும் காப்பாற்ற நாங்கள் தலையிடமாட்டோம் என்றும் பிரதமர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment