தனி முஸ்லிம் மாகாணம் வேண்டுமாம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர் வலியுறுத்தல்!!

முற்றிலும் ஒன்றுபட்ட இலங்கை எனும் கொள்கையில்

எம்.எச்.எம். அஷ்ரப் உறுதியாக இருந்தார்.

அஷ்ரப்பின் புதல்வர் அமான் அஷ்ரப்



அரசியலமைப்புக்கான புதிய யோசனைகளில் தனியான முஸ்லிம் மாகாண கொள்கையை உள்ளடக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் செயலாளர் ஹசனலி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே கட்சியின் தவிசாளர் பஸீர் சேகு தாவூத் இந்தக்கருத்தை வலியுறுத்தியிருந்தார்.
இது காங்கிரஸின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது என்றும் ஹசனலி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே உள்ள 9 மாகாணசபைகளில் ஒரு தமிழ் மாகாணம் என்பதற்கு உடன்பாடுள்ளது.எனவே தனியான முஸ்லிம் மாகாணம் தொடர்பில் சிந்திக்கப்பட வேண்டும்
இதேவேளை மாகாண அமைப்புக்களின் போது பௌதீக மற்றும் சனத்தொகை பரம்பல் என்பவற்றை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஹசனலி கோரியுள்ளார்.
பௌதீக ரீதியாக இந்தியாவின் பாண்டிச்சேரி மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இதேவேளை, முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ஒன்றுபட்ட இலங்கை எனும் கொள்கையில் உறுதியாக இருந்தவர் என்றும், பிரிவினையை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், அஷ்ரப்பின் புதல்வர் அமான் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு தனியான மாகாணம் தேவை என்பதை, முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் உறுதிப்படுத்தியிருந்தார் என்று, அந்தக் கட்சியின் தற்போதைய தவிசாளர் பஷீர் சேகுதாவூத் காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்துக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக பஷீர் சேகுதாவூத்துக்கு அமான் அஷ்ரப் எழுதியுள்ள கடிதமொன்றிலேயே மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய சுயலாபத்துக்காக வரலாற்று உண்மைகளை பஷீர் சேகுதாவூத் திவுபடுத்தக் கூடாது என்றும் அமான் அஷ்ரப் எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் அமான் அஷ்ரப் மேலும் தெரிவித்திருப்பதாவது;
இலங்கைத் தமிழர்களுக்கு தனியான ஆட்சி அலகு வழங்கப்படுமானால், முஸ்லிம்களுக்கும் அவ்வாறான தனி ஆட்சி அலகு வழங்கப்பட வேண்டும் என்கிற நியாயத்தினை, தனது அரசியலின் ஆரம்ப காலத்தில் அஷ்ரப் கூறியிருந்தார். ஆனாலும், காலப்போக்கில் அவருடைய அந்த அரசியல் பார்வை மாறிவிட்டது.
துறைமுகங்கள், கல்பல்துறை, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சராக அஷ்ரப் பதவியேற்ற நிலையில், கட்சியின் உயர்பீட மற்றும் அரசியல்பீட உறுப்பினர்களிடையே, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் வைத்து அவர் ஆற்றிய உரையில் அவருடைய இலக்குப் பற்றி தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த நாட்டின் சிறுபான்மை இனத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியாக, எங்களால் இயலுமானவற்றினைப் பெற்று விட்டோம். இனி நாட்டுக்கு நாம் சேவையாற்ற வேண்டுமெனில் தேசிய அரசிலுக்குள் எமது எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று அஷ்ரப் அங்கு வைத்துக் கூறியிருந்தார்.
அதற்கிணங்கவே, அவர் தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) எனும் பன்மைத்துவ அரசியல் நிறுவனத்தினை உருவாக்கினார். அதனூடாக முற்றிலும் ஒன்றுபட்ட இலங்கை எனும் கொள்கையில் உறுதியாக இருந்தார்.
இதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். ஆனாலும், அஷ்ரப்பினுடைய இந்த அரசியல் கொள்கையுடன் நீங்கள் உள்ளிட்ட சிலர் உடன்படவில்லை. அதனால்தான், நுஆவின் உயர்பீட உறுப்பினராக அஷ்ரப் உங்களை நியமிக்கவில்லை.
பிரிந்து கிடக்கும் ஒரு தேசம் தோற்கடிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்துகொள்ளும் அரசியல் முதிர்ச்சியற்றவராக நீங்கள் இருந்தீர்கள் என்பதை அஷ்ரப் அறிந்திருந்தார். இப்போதும் நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள்”. இவ்வாறு அந்தக் கடிதத்தில் அமான் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.


  

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top