இந்தியாவிலுள்ள அலிகார்
பல்கலைக்கழகத்தில்
மாட்டிறைச்சி உணவு விநியோகமாம்?
வாட்ஸ்
அப் மூலம் பரவிய தகவலால் சர்ச்சை
இந்தியாவிலுள்ள உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மருத்துவக்
கல்லூரி உணவு விடுதியில் மாட்டிறைச்சியால் தயாரிக்கப்பட்ட பிரியாணி வழங்கப்படுவதாக
கட்செவி அஞ்சலில் (வாட்ஸ் அப்) பரவிய தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக
அறிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக கட்செவி அஞ்சலில் பரவிய செய்தியில்,
"அலிகார் முஸ்லிம்
பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி உணவு விடுதியில் மாட்டிறைச்சி பிரியாணி
வழங்கப்படுகிறது. அதுவும், பசு இறைச்சியால் தயாரிக்கப்பட்ட பிரியாணி உணவு வழங்கப்படுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு ஆதாரமாக, உணவு விடுதியின் அட்டவணைக் குறிப்பின் புகைப்படமும் கட்செவி
அஞ்சலில் வெளியானது.
இதுதொடர்பான தகவல் கிடைத்ததும், அந்த உணவு விடுதிக்கு பல்கலைக்கழக உயரதிகாரிகள்
உடனடியாக சென்று சோதனை நடத்தினர்.
அலிகார் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ரஹத் அப்ரார் கூறுகையில்,
"பல்கலைக்கழகத்தின்
நற்பெயருக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் முயற்சியாகவே, இதுபோன்ற தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உணவு
விடுதியில் இருக்கும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள மாட்டிறைச்சி பிரியாணி
என்பது எருமை இறைச்சியைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. பசு இறைச்சியால் தயாரிக்கப்பட்டது
அல்ல. பல்கலைக்கழகத்தில் நூறாண்டுகளுக்கு முன்னரே பசு இறைச்சி தடை செய்யப்பட்டு
விட்டது' என்று
தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அலிகார் பல்கலைக்கழக உணவு விடுதி உரிமையாளர் மீது நடவடிக்கை
எடுக்கக்கோரி, மாவட்டக்
காவல்துறை கண்காணிப்பாளரின் அலுவலகம் அருகே பாஜக மேயர் சகுந்தலா பாரதி தலைமையில்
அக்கட்சியினர் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து,
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார்
விசாரணையைத் தொடங்கியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாட்டிறைச்சி வெளிப்படையாகவே பரிமாறப்படுகிறது
என்று மேயர் சகுந்தலா பாரதி கூறிஉள்ளார்.
|
0 comments:
Post a Comment