தமிழக தேர்தல் களத்தை
கலக்கப் போகும்
நடிகர் - நடிகைகள்
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளுமே பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் பிரசாரம் செய்வதற்காக நடிகர் வடிவேலு களம் இறக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்த வடிவேலு விஜயகாந்த்தை சரமாரியாக தாக்கிப் பேசினார். அவரது பேச்சை கேட்க கூட்டம் கூடியது.
இதே போல இந்த தேர்தலிலும் அரசியல் கட்சிகளின் சார்பில் பிரசாரம் செய்வதற்காக நடிகர் – நடிகைகள் தயாராகி வருகிறார்கள்.
அ.தி.மு.க. சார்பில் நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், பொன்னம்பலம், செந்தில், குண்டுகல்யாணம், சிங்கமுத்து, நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, விந்தியா உள்ளிட்டோர் அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்ய ஆயத்தமாகி வருகிறார்கள்.
தி.மு.க. சார்பில் நடிகர்கள் வாகை சந்திரசேகரர், குமரி முத்து, வாசுவிக்ரம், சமீபத்தில் அக்கட்சியில் சேர்ந்த இமான் அண்ணாச்சி, நடிகர் சங்க பிரச்சனையில் முக்கிய பங்காற்றிய பூச்சி முருகன் ஆகியோரும் பிரசாரத்துக்கு தயாராகி வருகிறார்கள். அ.தி.மு.க. அரசுக்கு எதிரான விஷயங்களை திரட்டி தேர்தல் பிரசாரத்தின் போது மேடைகளில் முழங்க இவர்கள் தயாராகி வருகிறார்கள்.
எப்போதுமே அ.தி.மு.க. – தி.மு.க. ஆகிய 2 கட்சிகளிலுமே பிரசாரத்தின் போது நடிகர் –நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் வருகிற சட்டமன்ற தேர்தலில் இந்த 2 கட்சிகளையும் மிஞ்சும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியே முன்னணி நடிகைகளாக விளங்கிய குஷ்பு – நக்மா ஆகியோரை பிரசாரத்துக்காக பெரிதும் நம்பி இருக்கிறது.
தமிழ் திரை உலகில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய குஷ்பு – நக்மா இருவரும் இந்த தேர்தல் களத்தில் நிச்சயம் கலக்குவார்கள் என்றே எதிர் பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த நடிகரும், இயக்குனருமான விசு, டைரக்டர் கங்கைஅமரன் ஆகியோரும் அக்கட்சிக்காக பிரசாரம் செய்ய உள்ளனர். எனவே இந்த தேர்தலில் ருசிகர பேச்சுக்களுக்கு பஞ்சமிருக்காது. அதே நேரத்தில் தடாலடியாக பேசுவதற்கும் நடிகர் – நடிகைகள் தீவிரமாகி வருகிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.