54 பந்துகளில் சதம்!
கடைசி டெஸ்டில் உலக சாதனை!!
நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இன்று தொடங்கியது.
வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலிய அணி. அதனால் இந்தப் போட்டியில் டிரா செய்தாலே தொடரை வெல்வதோடு, தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துவிட முடியும் என்ற நிலையில் களமிறங்கியது ஆஸ்திரேலியா. ஆனால் நியூஸிலாந்து அணியோ, இந்தப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் தங்களின் கேப்டன் மெக்கல்லத்தை வெற்றியோடு வழியனுப்புவதற்கும், தொடரை சமனில் முடிப்பதற்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. நியூஸிலாந்து அணி 1993, 2011 ஆகிய ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-1 என பின்தங்கிய நிலையில், அடுத்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை பேட்டிங் செய்ய அழைத்தது. முதல் 74 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தவித்த நிலையில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மெக்கல்லம். சிக்ஸரும் பவுண்டரிகளுமாக அடித்து ஆஸி.யின் பவுலிங்கைப் பதம் பார்த்தார். 34 பந்துகளில் அரை சதம் எடுத்த மெக்கல்லம், அதன்பிறகு இன்னும் வேகமாக ஆடி, 54 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை செய்தார். இது அவருடைய 12-வது டெஸ்ட் சதமாகும்.
இதற்கு முன்பு, 1986-ல், இங்கிலாந்துக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விவியன் ரிச்சர்ட்ஸும், 2014-ல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணியின் மிஸ்பா உல் ஹக்-கும் 56 பந்துகளில் சதம் எடுத்ததே வேகமான டெஸ்ட் சதங்களாக இருந்தன. அதைத் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் முறியடித்துள்ளார் மெக்கல்லம்.
5-வது விக்கெட்டுக்கு மெக்கல்லமும் ஆண்டர்சனும் 18.2 ஓவர்களில் 179 ஓட்டங்கள் எடுத்தார்கள்.
விவியன் ரிச்சர்ட்ஸின் உலக சாதனை முறியடிப்பு:
வருத்தப்படும் மெக்கல்லம்!
இதுபற்றி அவர் கூறும்போது:
இதற்கு முன்பு, அதிவேக சதத்தை ரிச்சர்ட்ஸ் அடித்துள்ளார் என்பது எனக்குத் தெரியாது. ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் அடிக்கவே முயன்றேன். இளம் பருவத்தில் ரிச்சர்ட்ஸ்தான் என்னுடைய ஆதர்சமாக இருந்தார். எனவே அவருடைய சாதனையை முறியடித்ததில் மகிழ்ச்சி! அதேசமயம் அவரைப் போன்ற ஒரு வீரரின் சாதனையைத் தாண்டியது சங்கடத்தை உண்டுபண்ணுகிறது. பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளம் என்பதால் ஆக்ரோஷமாக விளையாடினேன் என்றார்.
0 comments:
Post a Comment