“நான் விடை பெறுகிறேன்.. விடைபெறுகிறேன்”
மெக்கல்லம்மின் பிரியாவிடை உரை
ஆஸ்திரேலியா, நீங்கள் உலகின் நம்பர் 1 அணி என்பதை நிரூபித்து விட்டீர்கள். நீங்கள் இங்கு வந்திறங்கும் போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருப்பதாகவே கருதினோம், ஆனால் நீங்கள் எங்களை ஊதித்தள்ளி மைதானத்துக்கு வெளியே தள்ளிவிட்டீர்கள். நீங்கள் ஏன் தரமான அணி என்பதை எங்களுக்குக் காட்டி விட்டீர்கள்.
இரு அணிகளும் அபாரமான உணர்வுடன் ஆடினோம். உங்கள் நாட்டிற்கு நீங்கள் சிறந்த தூதர்களாக செயல்படுகிறீர்கள். உங்களிடம் ஸ்டீவ் ஸ்மித் என்ற மிகப்பெரிய தலைவர் உள்ளார். உங்கள் எதிர்கால வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்,
நியூஸிலாந்து ரசிகர்கள் குறித்து..
நாங்கள் ஒரு அணியாக வெற்றி, தோல்வி என்று ஏற்றத்தாழ்வான நிலையை சந்தித்துள்ளோம், ஆனால் இந்த அணி குறித்து நீங்கள் உண்மையில் பெருமையடைவீர்கள் என்றே நான் கருதுகிறேன். இந்த அணி மட்டுமல்ல நியூஸிலாந்துக்கு கடந்த பல ஆண்டுகளாக ஆடிய வீரர்கள் குறித்தும் நீங்கள் பெருமையடைவீர்கள் என்றே கருதுகிறேன்.
இப்போதைய அணி வீரர்கள் அருமையாக ஆடி வருகிறார்கள், வரும் தொடர்களிலும் இவர்கள் உங்களுக்கு மகிழ்வூட்டுவார்கள்.
சக வீரர்களுக்கான செய்தி....
கடந்த சில ஆண்டுகளாக நல்ல கேளிக்கையில் ஈடுபட்டோம். நாம் சில சாதனைகளைச் செய்துள்ளோம். நாம் சில போட்டிகளில் தோல்வியடைந்தோம் ஆனாலும் நாம் நம் ஆன்மாவை திரும்ப மீட்டுள்ளோம்.
எனது வாழ்க்கையில் உங்களை நான் மறக்க வாய்ப்பில்லை. நியூஸிலாந்தில் மட்டுமல்ல அயல்நாடுகளிலும் உங்களுடன் இருந்த தருணங்களை மறக்க முடியாது.
உங்களில் நல்ல தலைவர்கள் உள்ளனர், நீங்கள் ஒரு அணியாக நம் அணியை மேலெடுத்துச் செல்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அடுத்த 2 ஆண்டுகளில் நியூஸிலாந்து அணி உயரிய நிலையை அடையும் என்றே நான் கருதுகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்,
குடும்பத்தினருக்கு...
ஒரு கிரிக்கெட் வீரருக்கு குடும்பம் ஒரு கடினமான இடம். வீட்டை விட்டு நிறைய ஆண்டுகள் பிரிந்து இருக்கிறோம். குடும்பத்தின் ஆதரவும், அர்ப்பணிப்பும் இல்லாவிட்டால் இதனை செய்து விட முடியாது.
கடந்த 14 ஆண்டுகளாக நீங்கள்தான் என் கனவை நான் வாழ அனுமதித்தீர்கள். நான் என் மீதி நாட்களை உங்களுக்காகவே செலவிடுவேன்.
அடுத்த கட்ட வாழ்க்கைக்கு ஒருவிதமான துயரத்துடன் தயார்படுத்திக் கொள்வது சவால், ஏனெனில் நாம் எதை விட்டுச் செல்கிறோம் என்பது நம்மை துரத்தியபடியே இருக்கும். ஆனாலும் நம் முன் ஒரு பெரிய உற்சாகமும் கரைபுரண்டு ஓடுகிறது. அனைவருக்கும் நன்றி. இவ்வாறு பேசினார் பிரெண்டன் மெக்கல்லம்.
மெக்கல்லம்மின் சாதனை.
நியூஸிலாந்து கேப்டனும் அதிரடி வீரருமான பிரெண்டன் மெக்கல்லம்மின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
101 டெஸ்ட் போட்டிகளில் 6,453 ஓட்டங்களை 38.64 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ள மெக்கல்லம், அதிகபட்ச ஸ்கோராக 302 ஓட்டங்களை இந்தியாவுக்கு எதிராக எடுத்தார். இதில் 12 சதங்கள், 31 அரைசதங்கள் அடங்கும். இந்த ஓட்டங்களில் 776 பவுண்டரிகளையும் 107 சிக்சர்களையும் சாதித்துள்ளார் மெக்கல்லம். 198 கேட்ச்களை பிடித்ததோடு 11 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.
2004-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியை ஆடியது முதல் தொடர்ச்சியாக 101 டெஸ்ட் போட்டிகளில் மெக்கல்லம் ஆடி சாதனை புரிந்துள்ளார். தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 54 பந்துகளில் சதம் கண்டு விவ் ரிச்சர்ட்ஸ் உலக சாதனையை முறியடித்ததோடு, ஒரு கேப்டனாக ஓய்வு பெறும் டெஸ்ட் போட்டியில் அதிகர் ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற பெருமையையும் மெக்கல்லம் பெற்றுள்ளார்.
கேப்டன்சியில் ஜெஃப் ஹோவர்த்துக்குப் பிறகு மெக்கல்லம் தன் கேப்டன்சியில் அதிக போட்டிகளை நியூஸிலாந்துக்கு வெற்றி பெற்றுத் தந்துள்ளார்.
டுவெண்டி 20 சர்வதேச கிரிக்கெட்டில் மெக்கல்லம் 2,140 ஓட்டங்களை எடுத்து அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை வைத்துள்ளார். இந்த வடிவத்தில் இவர் 2 சதங்கள் மற்றும் 15 அரைசதங்களை எடுத்து இந்தச் சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார். மேலும் டுவெண்டி 20 கிரிக்கெட்டில்
91 சிக்சர்கள் 199 பவுண்டரிக்ள் அடித்து இந்தச் சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார் மெக்கல்லம்.
0 comments:
Post a Comment