மகனை இழந்து தவித்த
தாயிடம்
பணக்கட்டுகளை நீட்டிய அரசியல்வாதி!
கடந்த செவ்வாயன்று பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த இளைஞர் ஹரீஷ் (23), இறப்பதற்கு முன்பு தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
அவரது மனித நேயத்தை சமூக தளங்களும், ஊடகங்களும் நேற்று புகழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில், தனது மகனை இழந்து, மருத்துவமனை வாயிலில் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருந்த ஹரீஷின் தாயிடம், ரூ.5 லட்சத்துக்கான ரொக்கப்பணத்தை எடுத்துக் கொண்டு நீட்டினார் ஒரு அரசியல்வாதி.
ஜனதா தளக் கட்சி எம்எல்ஏவான ஸமீர் அஹமது கான், ரூ.5 லட்சத்துக்கான பணக்கட்டுகளோடு, தான் பெற்ற மகனை ஒரு சில நொடிகளில் இழந்து கண்ணீருடன் கதறிக் கொண்டிருந்த தாயிடம் கொடுக்க சென்றார்.
அந்த தாய்க்கு தேவை ஆறுதலோ அல்லது தேற்றுதலோ தவிர.. கட்டுக்கட்டான பணமல்ல.
விளம்பரத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் அரசியல்வாதிகள், இப்படியுமா நடந்து கொள்வார்கள் என்று அங்கிருந்தவர்கள் முகம் சுளித்தார்கள் என ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
மகனை இழந்து வாடும் தாய்க்கு இழப்பீடு வழங்கும் வகையில்தான் நான் ரூ.5 லட்சத்தை வழங்கினேன். இதில் எந்த தவறும் இல்லை என்று அவர் தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கிறாராம்.
இதனோடு தொடர்புள்ள செய்தி……..
இறக்கும் நிலையில் உடல் தானம்:
உருக்கும் சம்பவம்
விபத்தில் படுகாயமடைந்த நிலையில், தனது உறுப்புகளை தானமாக அளிப்பதற்கு செய்கை மூலம் தெரிவித்த பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்படுகிறார்.
பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர் ஹரீஸ் நஞ்சப்பா. தனது சொந்த ஊருக்குச் ு சென்றவர் செவ்வாய்க்கிழமை பெங்களூரு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அவர் மீது ஒரு சரக்கு வாகனம் மோதியது. இதில் ஹரீஸ் உடல் இரு துண்டானது. எனினும் அவருக்கு நினைவிருந்தது. அருகேயிருந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து செய்வது அறியாது திகைத்தனர். எனினும், காவல் துறைக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்தனர்.
உடல் இரண்டு துண்டாகி கிடந்த நிலையிலும்,தனது கண்ணையும், உடலையும் தானம் செய்யுமாறு ஹாரீஸ் செய்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். சிலர் அதை தங்களது போனில் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
விபத்து நடந்த 8 நிமிடத்துக்குள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸில் ஹரீஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அப்போதும் அவர் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து செய்கையால் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், மருத்துவமனைக்கு சென்ற சில நிமிடங்களிலேயே ஹரீஸ் இறந்துவிட்டார்.
உடல் உறுப்பு தானம் குறித்து ஹரீஸ் மேற்கொண்ட நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலர் அவரது செயலைப் பாராட்டி வருகின்றனர்.
0 comments:
Post a Comment