சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயம்

ஒவ்வொருவரும் சொந்த அரசியல் செய்ய நினைத்தால்

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் அது ஒரு போதும் பலிக்காது

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஆவேசம்!

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தை வைத்து ஒவ்வொருவரும் சொந்த அரசியல் செய்ய நினைத்தால் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் அது ஒரு போதும் பலிக்காது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘வீட்டுக்கு வீடு மரம் திட்டத்தின் இரண்டாம் கட்ட அங்குரார்ப்பண விழா நேற்று13 ஆம் திகதி  சனிக்கிழமை சாய்ந்தமருதில் இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.
இவ்வைபவத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் மரைக்காயர் சபையினரில் சிலர் சபையின் தலைவர் வை.எம் ஹனிபா தலைமையில் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வைபவத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் நாட்டின் பிரதமரிடம் வாக்குறுதியை பெற்றுத்தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே அதனை நிறைவேற்றியும் தரும்
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தை வைத்து ஒவ்வொருவரும் சொந்த அரசியல் செய்ய நினைத்தால் அது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் ஒருபோதும் பலிக்காது

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுத்தே வருகின்றோம். அது பிரதமர் அளித்த வாக்குறுதி. மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸினால் பெற்றுத்தரப்பட்ட அந்த வாக்குறுதியை நிறைவேற்றித் தருகின்ற விடயத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதில் மாற்றுக கருத்துக்கு இடமில்லை. எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையுமில்லை.
ஆனால் சிலர் இதனுள் விஷமத்தனமாக புகுந்து விளையாடி, இல்லாத பொல்லாத கதையெல்லாம் சொல்லி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட முனைகின்றனர். தமது சொந்த அரசியலை செய்வதற்காக மக்கள் மத்தியில் பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர்.
சிலர் அடிக்கடி உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து, அரசியல் நெருக்கடிகளை கொடுத்து, அதையும் இதையும் அள்ளி வைத்து, அவரை குழப்ப முயற்சித்தாலும் கூட அவர் இது விடயத்தில் நிச்சயம் தெளிவாகவே இருக்கிறார் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. நான் அவரை சந்திக்கின்ற போதெல்லாம் பிரதமரின் வாக்குறுதி பற்றி எடுத்துக்கூறி வருகின்றேன்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினாலும் நாட்டின் தலைமையினாலும் தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. இது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் சொந்த அரசியல் இல்லை. எமது இயக்கத்திற்கு 95 வீதம் வாக்களித்து வருகின்ற சாய்ந்தமருது மக்களுக்கே ஏனையவர்களை விட மரத்தின் கனிகளை புசிப்பதற்கான அதிக உரிமை இருக்கிறது. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top