பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் 'லிட்டில் மாஸ்டர்'
ஹனிப் முஹம்மது மரணம்



பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பேட்டிங் ஜாம்பவான் ஹனிப் முஹம்மது வயது 81. நேற்று மரணம் அடைந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹனிப் முகமது. 2013-ம் ஆண்டு  நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதன் பின்னர் புற்றுநோய்க்கு லண்டனில் ஆபரேஷன் செய்த ஹனிப் முஹம்மது, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் புற்றுநோய் உடல் முழுவதும் பரவியதால் அவரது உடல்நிலை மோசமானது. கராச்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த 30 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே, நேற்று காலை அவர் மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. சிறிது நேரத்தில் அவர் உயிருடன் இருப்பதாக அவரது மகன் சோயிப் முஹம்மது தெரிவித்தார். டாக்டர்களின் தீவிர முயற்சியால் 6 நிமிடங்களுக்கு பிறகு அவரது இதயம் மீண்டும் துடிப்பதாக சோயிப் முஹம்மது கூறினார். இருப்பினும் அடுத்த சில மணி நேரத்திற்கு பிறகு அவரது உயிர் பிரிந்தது. அந்த தகவலையும் அவரது மகன் சோயிப் முஹம்மதுவே வெளியிட்டார்.
ஹனிப் முஹம்மது 1934-ம் ஆண்டு இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் பிறந்தவர். 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள் ட்பட 3,915 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 1958-ம் ஆண்டு பார்படோசில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் பாலோ-ஆன் ஆன நிலையில், 2-வது இன்னிங்சில் 337 ஓட்டங்கள் குவித்து அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். அந்த இன்னிங்சில் அவர் 970 நிமிடங்கள் களத்தில் நின்றார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரரின் நீண்ட நேர இன்னிங்சாக இந்த நாள் வரை நீடிக்கிறது. மேலும் அந்த டெஸ்டில் அவர் எடுத்த ஓட்டங்களே டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர் ஒருவரின் தனிநபர் அதிகபட்சமாகும்.
இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர் ஆகியோரை போன்று இவரும் 'லிட்டில் மாஸ்டர்' என்று அந்த நாட்டு ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். இவரது சகோதரர்கள் வாசிர், முஷ்டாக், சதிக் மற்றும் மகன் சோயிப் முஹம்மது ஆகியோரும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார்கள்.

அவரது மறைவுக்கு .சி.சி, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைமற்றும் முன்னாள் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர், 'கிரிக்கெட் உலகம் ஜாம்பவான் ஹனிப் முஹம்மதுவை இழந்துள்ளது. எப்போதும் நேர்மறை சிந்தனை கொண்டவர். 2006-ம் ஆண்டு அவருடனான சந்திப்பு மறக்க முடியாதது' என்று குறிப்பிட்டுள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top