முஸ்லிம் காங்கிரஸ் முரண்பாட்டைத்
தீர்க்க
தலைவர் ரவூப் ஹக்கீம்
விடுத்த தூது!
ஹக்கீமின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது"
நிராகரித்த கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசனலியுடன் சமரசத்திற்கு வருவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
ரவூப் ஹக்கீம் முன்வந்துள்ளார் எனநம்பகரமாகத் தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசனலியின் இளைய சகோதரரும், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான ஜப்பார் அலியை தனது வீட்டுக்கு அழைத்து பல விடயங்கள் தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேசியதுடன் தன்னுடன் இணக்கப்பாட்டுக்கு வருமாறு ஹசனலிக்குத் தூது ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற சல்மானை இராஜினாமாச் செய்துவிட்டு உடனடியாக ஹசனலி நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்றும், கட்சியின் தலைமையகத்தில் இருந்துகொண்டு கட்சிப்பணிகளை முன்னெடுக்குமாறும், எதிர்காலத்தில் அவரின் நன்னடத்தையை கவனத்தில்கொண்டு முழுமையான செயலாளருக்குரிய அதிகாரங்கள் ஹசனலிக்கு வழங்கப்படுவது பற்றி தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஜப்பார் அலியிடம் கூறியதுடன், இதனை ஹசனலியிடம் தெரியப்படுத்தி அவரை சம்மதிக்க வைக்குமாறும் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்த விடயங்களை தனது சகோதரர் ஹசனலியிடம் தூது சென்ற ஜப்பார் அலிதனது சகோதரர் எம்.ரி.ஹசனலியிடம் முன்வைத்ததாகவும்,இதற்கு
சற்றுக் கோபப்பட்ட எம்.ரி.ஹசனலி, "தனது செயலாளர் பதவிக்குரிய அதிகாரத்தை என்ன காரணத்திற்காக இரகசியமான முறையில் மாற்றினார் என்பதை கட்சியின் தலைவர் அமைச்சர் ஹக்கீம் முதலில் எனக்குச் சொல்ல வேண்டும். அடுத்தது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக நாங்கள் போராடவில்லை. என்னிடமிருந்து பறித்தெடுத்த அதிகாரங்களை வழங்கவேண்டும் என்பதுதான் எமது போராட்டமாகும். நன்னடத்தைக் காலம் கணிக்கப்படுகின்ற அளவுக்கு எனது தராதரம் இருக்கின்றதா? என்பதை ஹக்கீம் கூறவேண்டும். ஹக்கீமின் இந்தக் கருத்துக்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார் என அறியவருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமாக எம்.ரி.ஹசனலியும், உயர்பீட செயலாளராக மன்சூர் ஏ.காதரும் கட்சியின் பேராளர் மாநாட்டில் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறான நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் மேற்படி இருவருக்கும் கூட்டங்களுக்கு அழைப்பு அனுப்பி வருகின்றார்.
தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் வேட்பாளர் நியமனப் பத்திரத்தில் கையொப்பமிடுகின்ற அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதை தேர்தல்கள் ஆணையாளரே தீர்மானிப்பார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் செயலாளருக்குரிய அதிகாரத்தை மீண்டும் வழங்கக்கோரி கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுள்ள செயலாளர்நாயகம் எம்.ரி.ஹசனலியின் அண்மைக்கால ஊடக அறிக்கைகள் அக்கட்சியின் எதிர்காலதேர்தல் செயற்பாடுகளுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

0 comments:
Post a Comment