ஏறாவூர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளுக்கு
மின்தூக்கி இயந்திரங்கள்


கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ் ‎‎நஸீர் அஹமட் அவர்களின் மாகாண நிதிஒதுக்கீட்டில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு மூன்று மாடிகள் கொண்ட மகப்பேற்று மருத்துவக் கட்டிடத்தினை பூர்த்திசெய்வதற்கு இவ்வருடம் ஒரு கோடியே முப்பத்து ஐந்து இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலைகள் நடைபெற்று வரும் சந்தர்ப்பத்தில், இம்மாடியை பயன்படுத்தும் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் இம்மாடியில் அமையப்பெறவுள்ளசத்திரசிகிச்சைக்கூடத்துக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் போன்றோரின் வசதிக்காக  கிழக்குமாகாண முதலமைச்சரின் வேண்டுகோளின் பேரில் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு மின்தூக்கி இயந்திரம் பொருத்துவதற்கு ரூபா 4,650,000.00 நிதி ஒதுக்கீட்டை சுகாதார பிரதியமைச்சர் பைஸல் காசிம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
 இதற்கமைவாக பிரதிப்பணிப்பாளர் நாயகம் KDLK.குணவர்த்தனவின் 15.08.2016 திகதிய BO4/Eastern/2016 இலக்க கடிதம் மூலம் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுக்கு இதனை உடன் செய்துகொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கும் இவ்வாறான மின்தூக்கி இயந்திரம் பொருத்துவதற்கு  முதலமைச்சரின் வேண்டுகோளின் பேரில் ரூபா 4,650,000.00 நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது. ஆக மொத்தம் இரு ஆதார வைத்தியசாலைகளுக்கும் மின்தூக்கி இயந்திரங்கள் பொருத்துவதற்காக ரூபா 9,300, 000.00 நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
மேலும் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைப்பிரிவு (ETU) மற்றும் சத்திரசிகிச்சைப் பிரிவுகளுக்கான மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்காக முதலமைச்சரின் வேண்டுகோளின் பேரில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைஸல்காசிம் அவர்கள் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இப்பொருட்களை கொள்வனவு செய்வதற்கு கிழக்குமாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அவர்களினால் கேள்வி மனு கோருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் 2017 ஆம் ஆண்டின் நிதி ஒதுக்கீட்டில் சிறப்புவைத்திய நிபுணர்களுக்கான தங்குமிட விடுதி மற்றும் பிரத்தியேக சத்திரசிகிச்சை பிரிவு போன்றவற்றினை அமைப்பதற்கும் 138 மில்லியன் ரூபாய் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top