பட்டாசு மார்க்கெட்டில் தீ விபத்து
 29 பேர் பலி. 70 பேர் காயம்

மெக்சிகோவில் பட்டாசு மார்க்கெட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் பலியாகினர். 70 பேர் காயம் அடைந்தனர்.

மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியின் புறநகரான துல்டெப்க் பகுதியில் பட்டாசு விற்பனை செய்யும் மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான பட்டாசு கடைகள் உள்ளன.

பொதுவாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசுகளை கொளுத்தி வானவேடிக்கை நடத்துவது வழக்கம்.

தற்போது அப்பண்டிகைகள் வர இருப்பதால் அங்கு ஏராளமான ரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று மாலை 2.50 மணி அளவில் (லங்கை நேரப்படி இரவு 8.50) ஒரு பட்டாசு கடையில் திடீரென தீப்பிடித்தது.

அந்ததீமளமளவென பரவி அடுத்தடுத்த கடைகளிலும் பிடித்தது. இறுதியில் அந்த மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் தீப்பிடித்தது. இதனால் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

இதனால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது. இந்த தீ விபத்து நடந்த போது பட்டாசுகள் வாங்க ஏராளமானோர் குவிந்து இருந்தனர். அவர்கள் உயிர் தப்பிக்க அங்குமிங்கும் ஓட்டம் பிடித்தனர்.

தீயை அணைக்க ஏராளமான தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. இருந்தும் தீ விபத்தில் 29 பேர் உடல் கருகி பலியாகினர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே பலியானோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

இந்த தீ விபத்து மெக்சிகோவில் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தீவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு மெக்சிகோ ஜனாதிபதி என்ரிக் பெனாநியடோ ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.


தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top