தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக
கிரிஜா வைத்தியநாதன் நியமனம்
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதையடுத்து, தமிழக
தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா
வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மணல் குவாரிகளை நடத்தி பல நூறு கோடி ரூபாயை முறைகேடாக சம்பாதித்த தொழிலதிபர் சேகர் ரெட்டி வருமான வரித்துறையினரிடம் பிடிபட்டடார். அவர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் சிக்கியது. அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சேகர் ரெட்டிக்கும் தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராம மோகன ராவ் அவரது மகன் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று முழுவதும் சோதனை நடத்தினர். தலைமைச் செயலக அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், தலைமைச் செயலாளர் பொறுப்பில் இருந்து ராமமோகன ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில், புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனை நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வந்த கிரிஜா வைத்தியநாதன், நில நிர்வாகம் மற்றும் வருவாய் துறை ஆணையராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். அத்துடன், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1981ம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன், முதுகலை இயற்பியல் பட்டதாரி ஆவார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சுகாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் உயர் பதவிகளை வகித்து வந்த இவர், இன்று தலைமைச் செயலாளராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிஜா வைத்தியநாதன், பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகரின் தம்பி மனைவியாவார். இந்த பின்னணியை மட்டும் எடுத்துக் கொண்டு, கிரிஜா வைத்தியநாதன் மூலமாக, தமிழக அரசின் நடவடிக்கைகளை பாஜக கைப்பற்ற நினைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, தமிழக அரசில் பாஜக தலைமையிலான மத்திய அரசு தலையிட முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள், எஸ்வி சேகரின் உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக தற்போது கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு ஊடகங்களில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
ஆனால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும், கிரிஜா வைத்தியநாதன் குறித்து பேசும் போது, மிகச் சரியான நபரை தமிழக அரசு தேர்வு செய்திருப்பதாகக் கூறுகின்றனர்.
ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே மிகவும் மூத்தவரும், ஏராளமான முக்கியத் துறைகளில் அனுபவம் நிறைந்தவராகவும் இருக்கும் கிரிஜா வைத்தியநாதன், இப்பதவிக்கு மிகச் சரியானவர் என்று கூறுகிறார்கள்.
பணியில் அப்பழுக்கற்றவரும், மிகச் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவருமாக கிரிஜா வைத்தியநாதன் விளங்குவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment