வில்பத்து சரணாலயத்தை விரிவுபடுத்தி
வனஜீவராசிகள் வலயமாக பிரகடனப்படுத்துமாறு
வில்பத்து சரணாலயத்துக்குரிய வனப்பிரதேசங்களை விரிவுபடுத்தி தற்போது வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சேராத அது சார்ந்த அனைத்து நிலப்பரப்பையும் உள்ளடக்கக்கூடியவாறு வனஜீவராசிகள் வலயத்தை வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன்; நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி வில்பத்து உள்ளிட்ட அனைத்து பெருங்காடுகளையும் ஆகாயத்திலிருந்து தொடர்ச்சியாக கண்காணிக்கக்கூடிய செயற்திட்டத்தை துரிதமாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுற்றாடல் அமைச்சுக்குரிய நிறுவன தலைவர்களுடன் நேற்று (30) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது மேற்கொள்ளப்படும் காடழிப்பு தொடர்பில் அதில் ஈடுபடுபவர்களின் தராதரம் பார்க்காமல் சட்டத்தை அமுல்படுத்துமாறு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி காடழிப்பு மற்றும் காடுகளில் மரங்கள் தரிக்கப்படுதல் போன்றவற்றுக்கெதிரான சட்டங்களுக்கமைய அமுலில் உள்ள தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனையை முழுமையாக அமுல்படுத்துமாறு நீதிச் சேவை ஆணைக்குழுவைக் கோரவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இடம்பெறுவதாக கூறப்படும் காடழிப்பு தொடர்பிலான சில தரப்பினரின் குற்றச்சாட்டுக்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக விசேட கண்காணிப்பு குழுவை ஈடுபடுத்துமாறும் ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
சுற்றாடல் அமைச்சின் வனபாதுகாப்பு திணைக்களம் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலர்கள் சுற்றாடல் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் குறித்த கண்காணிப்பு குழுவில் உள்ளடக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
வில்பத்து சரணாலயத்தில் எந்தவொரு சுற்றாடல் பாதிப்புகளும் ஏற்படுத்தப்படவில்லையென அலுவலர்கள் ஜனாதிபதி அவர்களிடம் சுட்டிக்காட்டினார்கள். சில ஊடகங்களும் சுற்றாடல் அமைப்புக்களும் சுட்டிக்காட்டும் சம்பவங்கள் வில்பத்து சரணாலயத்துக்கு வெளியே இடம்பெறுபவை எனவும் அப் பிரதேசங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு கடந்த 2007 ஆண்டில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.
அந்த பிரதேசங்களில் சட்டவிரோதமாக காடழிப்பு மேற்கொள்ளப்படுமானால் அதற்கெதிராக சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு அலுவலர்களுக்கு கூறிய ஜனாதிபதி மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்காக புதிதாக காணிகளை ஒதுக்கும் போது காட்டுப் பிரதேசங்களிலிருந்து தூரத்திலுள்ள காணிகளைப் பயன்படுத்துவதற்கும் அக் காணிகளை அடையாளம் காண்பதற்கு விசேட செயற்திட்டத்தை தயாரிக்குமாறும் ஆலோசனை வழங்கினார்.
மன்னார், முசலி பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெக்கோ இயந்திரம் உட்பட உபகரணங்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன, வனஜீவராசிகள் அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.பீ.மீகஸ்முல்ல, மேலதிக செயலாளர் எல்.ஜே.எம்.பி.சீ.பண்டார, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கே.எச்.முத்துகுடஆரச்சி, வனஜீவராசிகள் திணைக்கள பிரதி பணிப்பாளர் மஞ்சுல அமரரத்ன ஆகியோர் உட்பட பல அலுவலர்கள் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.
0 comments:
Post a Comment