மறைந்த ஜெயலலிதாவின் தோழி

சசிகலாவைப் பற்றி----

வீடியோ கடையில் கேஸட்  விற்பனையாளராக இருந்து ஜெயலலிதாவுடன் நட்பு கொண்டு, அவருக்கு உற்ற தோழியாகி, பின்னர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி என அழைக்கப்பட்ட சசிகலா, இப்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர். கட்சியிலும், ஆட்சியிலும் எந்த பொறுப்பும் இதுவரை வகிக்காமல் நேரடியாக பொதுச்செயலாளர் ஆனதன் மூலம் மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் சசிகலா.
சசிகலா, ஜெயலலிதாவுக்கு அறிமுகமானது 1984 ஆம் ஆண்டில். வீடியோ கடை நடத்தி வந்த சசிகலா, அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரான ஜெயலலிதாவின் பிரசாரங்களை வீடியோவாக பதிவு செய்து கொடுக்க ஒப்பந்தமானார். அப்போது தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட்தாம்.
தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு திரைப்பட கேசட்களை சசிகலா தரத்துவங்க இருவருக்கும் நட்பு அதிகரித்தது. ஜெயலலிதாவுக்கு அரசியல் ரீதியாக சோதனை நிறைந்த கால கட்டத்தில் துணையாக இருந்ததால், நெருக்கம் அதிகரித்து போயஸ் கார்டனிலேயே தங்கினார் சசிகலா.
யாரும் நெருங்க முடியாதவர் என சொல்லப்படும் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக, ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்தவர் சசிகலா. தொழில் நிமித்தமாக சந்தித்துக் கொண்டாலும் உற்ற தோழியாகி, உடன் பிறவா சகோதரியாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஜெயலலிதாவின் உடனிருந்தவர் சசிகலா. இருமுறை போயஸ் கார்ட்னை விட்டு வெளியேற்றப்பட்டாலும் அந்த பிரிவு சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை.
"நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை. நிபந்தனையற்ற அன்பை நான் இதுவரை சந்தித்திருக்கவில்லை" என ஒரு பேட்டியில் சொன்ன ஜெயலலிதா, அதே பேட்டியின் இறுதியில், "என்னுடன் பிறக்காத சகோதரி சசிகலா. என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்" எனச்சொன்னார். அந்தளவு நெருக்கமானவர் சசிகலா
ஜெயலலிதாவுடன் நெருக்கத்தால், சசிகலாவின் கணவர் நடராஜன் உள்ளிட்ட குடும்பத்தினர் பலரும் அ.தி.மு.க.வில் அதிகாரம் செலுத்தத் தொடங்கினர். அரசியலிலும், பல்வேறு தொழில்களிலும் அவர் ஈடுபட்டனர். தனக்கு இணையாக ஒரு அரசை சசிகலாவின் குடும்பத்தினர் நடத்துவதாக புகார் சொல்லப்பட... 2001, 2011-ம் ஆண்டுகளில் இரு முறை கட்சியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டார் சசிகலா. சசிகலாவுடன் நீக்கப்பட்ட அவரது உறவினர்கள் யாரையும் ஜெயலலிதா சேர்த்துக்கொள்ளவில்லை.
சசிகலாவுடன் ஏற்பட்ட நெருக்கத்தால், சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மூன்றாவது மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுப்பதாக அறிவித்தார் ஜெயலலிதா. அவரின் திருமணத்தை ஜெயலலிதா பிரம்மாண்டமாக நடத்த அதுவே சர்ச்சையாகி... 1996-ம் ஆண்டு தேர்தல் தோல்விக்கு காரணமானது. தனக்கும், ஆட்சிக்கு கெட்ட பெயர் கிடைக்க சசிகலா குடும்பத்தினரின் அதிகாரமே காரணம் என நினைத்த ஜெயலலிதா, சசிகலாவையும், உறவினர்களையும் வெளியேற்றினார். சுதாகரன் வளர்ப்பு மகன் என்ற அறிவிப்பையும் திரும்ப பெற்றதோடு, பின்னர் தனது ஆட்சியிலேயே போதை பொருள் வழக்கில் சுதாகரனை கைது செய்து சிறையிலும் அடைத்தார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுடன் சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோரும் குற்றஞ்சாட்டப்பட்டனர். இந்த வழக்கில் ஜெயலலிதாவுடன் சசிகலா உள்ளிட்டோருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கிலும், டான்சி நில பேர ஊழல் வழக்கிலும் சிறை தண்டனை அனுபவித்தவர் சசிகலா.
ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக இருந்தாலும், கட்சியிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு பொறுப்பு ஏதும் வழங்கப்படவில்லை. கட்சியிலோ, ஆட்சியிலோ அவர் நேரடியாக அதிகாரம் செலுத்தும் அளவுக்கு பொறுப்பு இல்லாமலே இருந்தார்.
இதுவரை சசிகலா எந்த மேடையிலும் பேசியதில்லை. பேட்டி கொடுத்ததில்லை. ஒரே ஒரு முறை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 2011-ம் ஆண்டு ஜெயலலிதா போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றிய பின்னர், 2012-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு வருத்தம் தெரிவித்து கடிதமும், அதையே பத்திரிகைகளுக்கு அறிக்கையாகவும் வெளியிட்டார் சசிகலா.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் சசிகலாவின் குரலை கூட மக்கள் கேட்டதில்லை. சொத்துக்குவிப்பு வழக்கு, போயஸ் கார்டனை விட்டு வெளியேற்றம், குடும்ப ஆதிக்க புகார்கள் தொடங்கி ஜெயலலிதா மரணம் வரை பல பிரச்னைகளில் அவர் பெயர் கடுமையாக பேசப்பட்டாலும், இதுவரை அவர் மீடியாக்களிடமோ பொது இடத்திலோ பேசியதில்லை.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top