ஏறாவூரில் புற்றுநோய் தொடர்பாக

பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் பேரணி


புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் பேரணிஇன்று 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை   மட்டக்களப்பு- ஏறாவூர்ப் பிரதேசத்தில் நடைபெற்றது.
 தேசிய புற்று நோய் தடுப்பு திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வருடத்தில் சுமார் ஆயிரம் புற்றுநோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, புற்றுநோய் தொடர்பில் பொதுமக்களுக்கு   விழிப்புணர்வூட்டும் நோக்குடன் இந்த ஊர்வலம்   ஒழுங்கு செய்யப்பட்டதாக இதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
புற்றுநோய்  விஷேட வைத்திய நிபுணர் அகமட் இக்பால் தலைமையில் நடைபெற்ற இவ்வூர்வலத்தில் பிரதேச செயலாளர் எஸ்எல்எம் ஹனிபா, நகர சபையின் செயலாளர் எம்எச்எம் ஹமீம், முன்னாள் தவிசாளர்  எம்ஐஎம் தஸ்லிம் போன்ற பிரமுகர்களுடன்  பல பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ஏறாவூர் ஜாமிஉல் அக்பர் பள்ளிவாயலில் நடைபெற்ற கூட்டுத்தொழுகையையடுத்து பாதாதைகள் மற்றும் சுலோகங்களை ஏந்தியவண்ணம் ஆரம்பமான இந்த ஊர்வலம், பிரதான வீதிவழியாக சுமார் ஐந்நூறு மீற்றர் தூரத்தைக் கடந்து மணிக்கூட்டுக் கோபுரச்சந்தியில் முடிவடைந்தது.
வைத்திய நிபுணர் அஹமட் இக்பால் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

 'கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோயினால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மதுபானப் பாவனை, வெற்றிலை மெல்லுதல் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களினால் ஆண்களும் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை குணப்படுத்த முடியாது என நினைக்கும் பலர், வைத்திய சிகிச்சையை நாடாது அல்லது தாமதித்து சிகிச்சைக்குச் செல்வதனால் உயிராபத்து ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். எனவே, நோய்க்குரிய அடையாளங்கள் காணப்பட்டதும் உடனடியாக வைத்திய சிகிச்சையை நாடுவதன் மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும்" என்று அவர் கூறினார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top