முன்பள்ளி
மாணவர்களின்ஆன்மீக ஆரோக்கியங்களில்
அதிக
அக்கறை காட்ட வேண்டும்
- ஏ.ஆர்.எம்.ஜிப்ரி
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
முன்பள்ளி பருவ மாணவர்களின் உடல், உள, ஆன்மீக
ஆரோக்கியங்களில் அதிக அக்கறை காட்ட வேண்டியவர்களில் பெற்றோரும் முன்பள்ளி
ஆசிரியர்களும் இன்றியமையாதவர்கள் என கைத்தொழில் வர்த்தக அமைச்சரின் பாராளுமன்ற
விவகாரச் செயலாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்முனைத் தொகுதி அமைப்பாளருமான
ஏ.ஆர்.எம். ஜிப்ரி தெரிவித்தார்.
அண்மையில் சம்மாந்துறை அல் - அர்ஷத் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில்
இடம்பெற்ற ஸ்டார் பாலர் பாடசாலையின் ஆண்டிறுதி அறுவடை எனும் தலைப்பிலான பரிசளிப்பு
கலைவிழா அதன் அதிபர் எம்.ஐ.எம். உவைஸ் தலைமையில் நடைபெற்றது.அதில் பிரதம
அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கற்றல் என்பது கருவறையில் ஆரம்பித்து கல்லறையில் முடிவடையும் ஒரு தொடரான
செயற்பாடாகும். இதன் அடித்தளம்தான் முன்பள்ளி மற்று ஆரம்பக்கல்விப்பருவமாகும்.
இக்காலகட்டத்தில் சகலவிதமான ஆரோக்கியங்களையும் நற்பண்புகளையும் வழங்கி சிறந்த
மனப்பாங்கினையும் சமநிலையான ஆளுமையையும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான்
எதிர்காலத்தில் ஒழுக்கமுள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்க முடியும். சவால்கள் நிறைந்த
இக்காலகட்டத்தில் அவற்றை வெற்றி கொள்வதற்கான வழிவகைகளை பிஞ்சு நெஞ்சுகளில்
விதைப்பது முக்கியமானதாகும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது எனும்
பழமொழிக்கேற்ப இளமைக்காலத்தில் சிறந்த விழுமியப் பண்புகளை ஊட்டி வளர்ப்பதில்
குடும்பத்துடன் முன்பள்ளிகளும், ஆரம்பக் கல்வி
வழங்கும் பாடசாலைகளும் மிகுந்த அக்கறையுடன் செயற்பட வேண்டும் - என்றார்.
இந்நிகழ்வில், மாணவர்களின் கலை
நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு
நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இவ்வைபவத்தில் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர். ஏ. மன்சூர், கிழக்கு மாகாண முன்பள்ளி அபிவிருத்தி வெளிக்கள
உத்தியோகத்தர் எஸ்.எம். றிஸான் ஆகியோர் கௌரவ அதிகளாகக் கலந்து கொண்டதோடு, பெருமளவிலான பெற்றோர்களும் நிகழ்வில் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment