முகம் முழுக்க பச்சைக் குத்தி பெண்களைக் காத்திடும்

அதிசயமான  மலைக் கிராமம்

அந்தக் கிராமத்துப் பெண்கள் அழகாக இருப்பார்கள். மாநிறம். பொலிவான முகம்.கொஞ்சம் சின்னக் கண்கள். வளைவுகள் இல்லாத நேரான, நீளமான முடி. அந்த முடி அத்தனை மிருதுவாக இருக்கும். மெல்லிய உதட்டில் அழகான சிரிப்பு. சீரான பற்கள். சில சமயங்களில் சீரற்று இருந்தாலும் கூட, அதுவும் ஒருவித அழகைக் கொடுக்கவே செய்தது. சிலருக்கு சிரித்தால் குழி விழும் கன்னங்கள். மழைக் காடுகளை கடந்தோடும் அந்தக் கால்கள், சேற்றில் நனைந்து கரு நிறம் அப்பிக் கிடக்கும். கூழாங்கற்கள் நிறைந்த அந்த ஓடையில் கால்களை நனைக்கும் போது, தெளிவாகி அந்த அழகு திணறடிக்கும்திடகாத்திரமான உடல், உறுதியான உள்ளம். இந்தப் பெண்களை எப்படியாவது அடைய வேண்டுமென்ற இச்சையில், ராஜாக்களும், இளவரசர்களும் இன்னும் பலரும் ... இவர்களைக் கடத்திக் கொண்டு போவது வாடிக்கையானது. அந்த இனத்திற்கு இது பெரும் வேதனையானது...

ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பர்மாவின் வட மேற்கு மலைப் பகுதியில் வாழ்ந்த பழங்குடியின மக்களின் கதை தான் இது.
இதிலிருந்து தப்ப, தங்கள் இனப் பெண்களைக் காத்திட ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். முகம் முழுக்க பச்சைக் குத்திக் கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களின்  முக அழகை மறைத்துக் கொண்டனர். பிற்காலத்தில், இது அவர்களின் கலாச்சாராமாகவே இது மாறிப்போனது.

இன்றைய மியான்மரின் சின் மாநிலத்தில் சின் (Chin), டய் (Dai), மகாங் (Makang), மன் (Munn), மகன் (Magan) என பல பழங்குடி இனங்கள் விக்டோரியா மலைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்மியான்மர் தலைநகர் நே பிய் தோவில் (Nay Pyi Taw) இருந்து 7 மணி நேரம் சாலையில் பயணிக்க வேண்டும். பின்னர், 4 மணிநேரம் விசைப்படகில் பயணம். அங்கிருந்து சில மணி நேரம் மலைப் பாதையில் நடந்தால், இந்த மலைக் கிராமத்தை  அடையலாம்.

வயதானவர்கள் மற்றும் மத்திய வயதுப் பெண்களின் முகங்களில் சின்ன சின்ன வட்டங்கள், நீளமான கோடுகள், புள்ளிகள் என ஒவ்வொரு இனமும், ஒவ்வொரு வடிவங்களில் டாட்டூக்களை வரைந்துள்ளனர்.
 பன்றி கொழுப்பு, மூலிகைச் செடி, புகைக் கரி, மாட்டுக் குடல் ஆகியவற்றை சேர்த்து இந்த டாட்டூவுக்கான ரசாயனத்தைத் தயாரிக்கிறார்கள். ஆரம்பத்தில், அழகை மறைக்க வரையப்பட்ட டாட்டூக்கள், காலப்போக்கில் அழகின் அடையாளமாக மாறிப் போயின.
பூப்பெய்தும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான டாட்டூக்களைத் தேர்ந்தெடுப்பார்கள் . குறைந்தபட்சம் ஒரு நாளாவது ஆகும் அதை முகத்தில் வரைய. வலி உயிர் போகும். முகம் வீங்கிப் போய், வலி குறைய ஒரு வார காலமாகும். இருந்தும் இதை மகிழ்ச்சியோடு செய்து கொண்டிருந்தார்கள் சின் இன பெண்கள். ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் இந்தப் பழக்கத்திற்கு தடை விதித்தது மியான்மர் ராணுவ ஆட்சி. இன்று ஜனநாயக அரசுப் பொறுப்பேற்ற பின்னரும் அந்தத் தடைத் தொடர்கிறது.

அரசாங்கத் தடைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்றைய தலைமுறையினர் இதை செய்து கொள்ளத் தயாராக இல்லை. இளைஞர்கள் இன்று காடுகளிலிருந்து வெளியேறி பலரும் படிக்க, பணிபுரிய என நகரங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளனர். அவர்கள் இதை விரும்புவதில்லை. இன்று டாட்டூ முகத்தோடு இருக்கும் பெண்கள் தான் இந்தக் கலாச்சாரத்தின் கடைசி தலைமுறை. இது மட்டுமில்லாமல் இந்த இனங்களில் இன்னும் சில மாறுபட்ட பழக்கங்களும் இருக்கின்றன.
ஒவ்வொரு வீட்டின் முன் பக்கத்திலும் ஒரு கோழி முட்டையை வைத்திருக்கிறார்கள். அது தங்களை தீய சக்திகளிடமிருந்து தங்களைக் காக்கும் என்று நம்புகிறார்கள். மூக்கின் வழியே புல்லாங்குழல் வாசிக்கிறார்கள். ஆண்கள் வீடுகளில் சமைக்கக்கூடாது என்ற வழக்கம் இருக்கிறது. தன் மனைவி வீட்டிற்குப் போகும் கணவன்மார்கள் அங்கு ஏதொரு அசைவ உணவையும் சாப்பிடக் கூடாது. இப்படி பல பழக்கங்களும், அதற்கான பின்னணி காரணங்களும் அவர்களிடமிருக்கின்றன.

இவர்களின் இந்த வாழ்வைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அந்தக் கிராமங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இங்கிலந்தின் காலனியாதிக்கத்தில் இருந்த நாடு பர்மா. பர்மீயர்களைத் தவிர வேற்று நாட்டவர் யாரைப் பார்த்தாலும், வெள்ளையர்கள் என்று நினைத்தே பயப்படுகிறார்கள். தங்களை, தங்கள் வாழ்க்கையை ஒரு காட்சிப் பொருளாக்குவதை இவர்கள் விரும்புவதில்லை. அவர்களை ஏதோ விலங்கியல் பூங்காக்களில் அடைத்து வைத்திருக்கும் மிருகங்களைப் பார்ப்பது போன்று சுவாரஸ்யத்தோடுப் பார்த்து, அவர்கள் வாழ்வை கிண்டல் செய்து நகர்கிறது ஒரு பெருங் கூட்டம். அவர்களை அப்படி அணுகாமல், அவர்கள் வாழ்வியலை ரசனையோடு உணர்ந்து கொள்ள வருபவர்களை உபசரிக்க அவர்கள் தவறுவதில்லையாம்!














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top