பொலிஸ் சோதனையின்போது வெடிகுண்டை
வெடிக்கச் செய்து உயிரை மாய்த்த பெண் - சிறுவன்
வங்காளதேச தலைநகர் டாக்காவில் தீவிரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார், ஒரு வீட்டில் சோதனை நடத்தச் சென்றபோது அங்கிருந்த பெண் மற்றும் ஒரு சிறுவன் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தனர்.
வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள அஷ்கோனா பகுதியில் உள்ள ஒரு முன்று மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத தடுப்பு பிரிவு பொலிஸார், ஆயுதங்களுடன் இன்று அதிகாலையில் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர்.
பின்னர், கட்டிடத்தில் இருந்த பொதுமக்களை வெளியேற்றியதும் தீவிரவாதிகளை சரண் அடையும்படி எச்சரித்தனர். தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் வைத்திருந்ததால் பொலிஸார், யாரும் உள்ளே சென்று அதிரடி தாக்குதல் நடத்த முயற்சிக்கவில்லை.
பொலிஸாரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஒரு பெண், குழந்தையுடன் வெளியே வந்தார். ஆனால், பொலிஸாரைப் பார்த்ததும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்துபோனார். அப்போது அருகில் நின்றிருந்த ஒரு பெண் பலத்த காயம் அடைந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இரண்டு பெண்கள், இரண்டு குழந்தைகளுடன் சரண் அடைந்தனர்.
இதையடுத்து பொலிஸார், கண்ணீர் புகை குண்டுகளை கட்டிடத்தை நோக்கி வீசினர். அப்போது உள்ளே வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டது. சத்தம் அடங்கியதும் பொலிஸார், உள்ளே நுழைந்து சோதனை செய்தபோது, ஒரு சிறுவன் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
இறந்துபோன சிறுவன் தப்பி ஓடிய தீவிரவாத அமைப்பின் தலைவரின் மகன் என்றும், இறந்துபோன பெண் மற்றொரு தலைவரின் மனைவி என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment