ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அமைப்பினால்

தயார் செய்யப்பட்ட சாய்ந்தமருது தோணா அபிவிருத்தித் திட்டத்தை 

நடைமுறைப்படுத்துமாறு  மக்கள் கோரிக்கை

2005 ஆம் 2006 ஆம் ஆண்டு  காலப்பகுதியில் சுனாமியின் பின்னர் கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அமைப்பு ஒன்று  காரைதீவிலிருந்து சாய்ந்தமருது ஊருக்குள் செல்லும் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றைத் தயார் செய்துள்ளது. அத்திட்டத்தை செயற்படுத்துமாறு இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்
தோணா அபிவிருத்தி திட்டத்தினை செயற்படுத்த கல்முனை மாநகர சபையும் காரைதீவு பிரதேச சபையும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும்  இப்பிரதேச மக்கள் விரும்புகின்றனர்.
காரைதீவு தெற்கு எல்லையில் உள்ள வெட்டுவாய்க்காலில் இருந்து ஆரம்பித்து சாய்ந்தமருது ஒஸ்மன் வீதிக்கு அருகாமையில் கடலுடன் சங்கமிக்கும் பிரதான வடிச்சல் வாவியே தோணா அல்லது தொடுவாய் அல்லது கரச்சை எனப் பல பெயர்களினால் அழைக்கப் படுகின்றது. இதன் நீளம் சுமார் ஐந்து கி.மீ ஆகும்.
இத்தோணா சில பகுதிகளில் மிக விசாலமாகவும் சில இடங்களில் மிக ஒடுக்கமாகவும்  காணப்படுகின்றது. இற்றைக்கு  50 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட இத்தோணாவின் அகலம் தற்போது பன்மடங்கு குறைந்தவிட்டது. அக்காலத்தில் இத்தோணாவின் இருமருங்கிலும் பல வகையான மரங்களும் (தென்னை, மா, பாலை என்பன) செடி கொடிகளும் (கிண்ணை,தாளை,தண்டல், சாப்பை பன் என்பன) காணப்பட்டன. இவை வெள்ளப் பெருக்கின்போது தண்ணீர் ஊருக்குள் செல்லாது அரண் போல் பாதுகாத்தன.
தோணாவின் முக்கிய பிரயோசனம் மாரிகாலங்களில் வழிந்தோடும் நீரை கடலிற்குள் செலுத்துவதன் மூலம் ஊருக்குள் வெள்ளப்பெருக்கைத் தவிர்த்தலாகும். இதற்காக மாரிகாலங்களில் முகத்துவாரம் ஊர் மக்களால் வெட்டப்படும்.
முற்காலத்தில் தோணா பின்வரும் ஏனைய நடவடிக்கைளுக்கும் பிரயோசனப்பட்டது.
1 .மீன்படி, இறால் வளர்ப்பு
2. உப்பு வடித்தல் (இங்கு வடிக்கப்பட்ட உப்பு கண்டி மன்னனுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.))
3. தென்னை ஓலைகள் இளகவைத்து கிடுகு இளைத்தல்
4. நீச்சல் பயிற்ச்சிகளும் நீர் விளையாட்டுகளும்
5. தோணி ஓட்டப் பழகுதலும் தோணி ஓட்டப் போட்டிகளும்
தற்போது இத் தோணாவும் அதனை அண்டிய பிரதேசங்களும் குப்பை கூழங்கள் கொட்டும் இடங்களாகவும் சுற்றாடல் சுகாதாரத்துக்குப் பங்கமான பிரதேசங்களாகவும் காட்சியளிக்கின்றன. மேலும் இத் தோணா பாதுகாப்பற்றதாக உள்ளதால் பலர் இதற்குள் தவறி விழுந்து மரணித்தும் உள்ளனர்.;
2004 சுனாமியின்போது தோணாவுள் பிரவேசித்த கடல் அலைகள் தோணாவின் இருமருங்கிலும் காணப்பட்ட செடி கொடிகளினால் ஆன அரண் இல்லாததனால் இலகுவாகவும் வேகமாகவும் ஊருக்குள் பிரவேசித்து பலத்த சேதங்களை  ஏற்படுத்தின.
எதிர்காலத்தில் இத்தோணாவை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து இதனைப் பாதுகாப்பானதாகவும் பொழுது போக்குக்கான கேந்திரமாகவும் மாற்ற வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும் சுற்றாடல் சுகாதாரம் ரீதியாகவும் பல நன்மைகள் கிட்டுவதோடு  காரைதீவு மக்களுடன் மாளிகைக்காடு, சாய்ந்தமருது ஊர் மக்களுக்கிடையே நல்லுறவுகள் மேலும் வலுப்பெறும்.
2005 ஆம் 2006 ஆம் ஆண்டு  காலப்பகுதியில் சுனாமியின் பின்னர் கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த அமைப்பு ஒன்று இத்தோணாவை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றைத் தயார் செய்து கல்முனை மேயர் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் அரசியல் தலைமைகளிடம் சமர்ப்பித்திருந்தது.
இத்திட்டத்தினை செயற்படுத்த கல்முனை மாநகர சபையும் காரைதீவு பிரதேச சபையும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கை மக்களால் விடுக்கப்படுகின்றது.
நன்றி: தோணா குறித்த தகவல்கள் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின் கட்டுரையிலிருந்து

மக்களின் தாழ்மையான கேள்விகளும் வேண்டுகோளும்
தற்போது  நான்காவது தடவையாக இத் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு பெரும் தொகைப் பணம் செலவிடுவதற்கு அமைச்சரவையால் அங்கிகாரம் பெறப்பட்டுள்ளது.
தற்போது இடம்பெறப்போகும் தோணா அபிவிருத்தி சம்மந்தமாக இப்பிரதேச மக்களால் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
தோணாவிலிருந்து நீர் நிரம்பி வடிவதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனை கருத்திற் கொண்டு குறித்த கலப்பின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும் வகையில் தோணாவை அபிவிருத்தி செய்தல் மற்றும் தோணாவைச் சூழ வசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொது மக்களினை வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு இப் பெரும் தொகைப் பணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அப்படியானால், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொது மக்கள் வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை வழங்கியுள்ள அந்த அரச அதிகாரி யார்? எவ்வாறு அமைச்சர் இந்த புள்ளி விபரங்களையும் தகவலையும் பெற்றுக்கொண்டார் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தோணா அபிவிருத்தியின் உண்மையான திட்டம்தான் என்ன? எப்படி இதனை வடிவமைக்க உள்ளீர்கள்? இதன் முழுமையான வரைபடம் (DRAFT DRAWING) யார் எடுத்தது? தற்போது அது  யாரிடம் உள்ளது?
இப்பிரதேசத்திலுள்ள பொறியியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் அனுபவசாலிகள் மற்றும் பள்ளிவாசல்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்களின் கலந்தாலோசனைகள் கருத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ளதா? என்றும் மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இத்தோணாவில் எத்திட்டத்தை முதலில் செய்ய வேண்டும் என்ற மக்களின் அபிப்பிராயங்களைப் பெற்றுக் கொண்டதாகத் திட்டங்களைச் செய்யாமல் தங்களது விருப்பத்திற்கு கருமங்கள் இடம்பெறுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தோணாவில் வெள்ளரிப்பு ஏற்பட்டிருந்தால் தோணாவை அண்டியுள்ள பிரதேச வளவுகள் அரிக்கப்பட்டிருக்கும். ஆனால், அப்படி இடம்பெறாமல் தோணா ஒடுங்கி உள்ளதை அவதானிக்க முடியும்.
அப்படியானால் பல மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டதாகக் கூறி போடப்பட்ட வீதியை கிண்டி எடுத்துவிட்டு அதே இடத்தில் இந்த சுவர் அமைப்பதற்கான அவசியம் என்ன? இதுதானா அப்பிரதேச மக்கள் கேட்டுக்கொண்ட தோணா அபிவிருத்தி.? அப்படியானால் ஏற்கனவே போடப்பட்ட அந்த கிறவல் வீதியின் நிலை என்ன? என்றும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
அரசாங்கத்தினால் இப்பிரதேச மக்களின் நன்மைக்காக ஒதுக்கப்பட்டுள்ள இப்பெரும் தொகைப் பணத்தைக் கொண்டு தோணாவைச் செப்பனிட்டு மாபிள் கற்கள் கூட பதிக்க முடியும் ஆனால், என்னதான் செய்யத் திட்டமிடுகின்றார்களோ என்று ஒரு ரொட்டிக் கடைக்காரர் பெரு மூச்சுடன் கூறியதையும் எம்மால் கேட்க முடிந்தது.
பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஹக்கீம் அவர்களே!
பிரதி அமைச்சர் ஹரிஸ் அவர்களே!! 

மக்கள் விரும்பியுள்ள தோணா அபிவிருத்தியை உறுதிப்படுத்துங்கள்.பொது மக்களின் நிதி சரியான விதத்தில் பயன்படுத்த உத்தரவாதம் செய்யுங்கள் என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top