முஸ்லிம் காங்கிரஸின்  தாறுஸ்ஸலாமும்

மர்ஹும் அஷ்ரஃப் அவர்களின் உரையும்

முஸ்லிம் காங்கிரஸின் தாறுஸ்ஸலாம் (சாந்தி இல்லம்) பல இன மக்களின் உழைப்பும் பண உதவிகளைக் கொண்டும் நிர்மாணிக்கப்பட்டதாகும். மர்ஹும் அஷ்ரஃப் சாய்ந்தமருதில் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தெரிவிப்பு

பல இன மக்களினதும் ஐக்கியத்திற்காக தலைநகரில்  நிமிர்ந்து நிற்கின்ற (தாறுஸ்ஸலாம்) சாந்தி இல்லம் பல இன மக்களினதும் உழைப்பைக் கொண்டும், பண உதவிகளைக் கொண்டும் நிர்மாணிக்கப்பட்டதாகும். இந்த இல்லத்தை நிர்மாணிப்பதற்கு என ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கரணில் விக்கிரம்சிங்க, சிவசிதம்பரம் ஐயா, டக்ளஸ் தேவானந்தா போன்றோர் பண உதவி செய்திருக்கிறார்கள். ஏன் ஜப்பான் நாடு கூட பண உதவிகளைச் செய்திருக்கின்றது.இப்படிச் சொல்வதில் எனக்கு பெருமையாக இருக்கின்றது.
இவ்வாறு துறைமுகங்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.எம்.அஷ்ரஃப் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் முன்றலில் 1998 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 அம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் பேசுகையில் கூறினார்.
கல்முனை நீர் வழங்கல் திட்டம், சாய்ந்தமருது சிறுவர் பூங்கா என்பனவற்றை ஆரம்பித்து வைத்தும் சாய்ந்தமருது பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நடுதல், சாய்ந்தமருது ஐக்கிய விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடுதல் ஆகிய வைபவங்களில் அமைச்சர் கலந்துவிட்டு இறுதியில் இப்பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் மர்ஹும் அல்ஹாஜ் எம்..எம்.மீராலெவ்வை தலைமை வகித்த இப் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் அஷ்ரஃபின் நீண்ட உரை அதிகாலை 2.00 மணி வரை நீடித்தது.
அமைச்சர் அஷ்ரஃப் இக்கூட்டத்தில் பேசுகையில் கூறியதாவது:-
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு கண்ணாடியாக இருக்க வேண்டும்.என இஸ்லாம் மார்க்கம் கூறுகின்றது. அதேபோல்தான் ஒரு சமூகம் மற்றொரு சமூகத்திற்கு உறுதுணையாக இருந்தும் உதவ வேண்டும். எமது பார்வையும் எண்ணங்களும், சிந்தனைகளும் எப்போதும் பரந்து விரிந்து விசாலமானதாகவும் இருக்க வேண்டும்.நாளுக்கு நாள் மாறிக்கொண்டு செல்கின்ற உலகத்தின் வேகத்திற்கு ஏற்ப நாமும் நமது சிந்தனைகளும் எண்ணங்களும் மாறியே ஆகவேண்டும்.
எமது நாட்டில் பல பாகங்களிலும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற பல பள்ளிவாசல்கள் தமிழ், சிங்கள சகோதரர்களின் உழைப்பின் உறுதுணையுடனேயே உருவாக்கப்பட்டு வருகின்றது என்பத நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாம்அல்லாஹு அக்பர்என்று பாங்கு சொல்லி தொழுகைக்காக அழைக்கின்ற பள்ளிவாசல்களை நிர்மாணிப்பதற்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் தேர்ச்சியானவர்கள் இல்லை. நாம் அல்லாஹு அக்பர் என்று சொல்லி தொழுவதற்கு இந்து சகோதரர்களின் உதவிதான் தேவைப்படுகின்றது. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு இனம் மற்றொரு இனத்தின் உதவியை நாடவேண்டிய நிலையிலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவேதான் எமது நாட்டில் மூவின மக்களினதும் இன ஐக்கியம் உறுதிப்பட்டேயாக வேண்டும்.
ஒரு சமூகம் தமது நலனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றபோது மற்ற சமூகத்தின் விடிவுக்காகவும் பிரார்த்தனை புரிய வேண்டும். ஒரு சமூகத்தின் சந்தோசம் மற்ற சமூகத்தின் சந்தோசத்தைக் குறைத்து விடக்கூடாது.
கல்வியில் எமது சமூகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த முன்னேற்றமும் வளர்ச்சியும் மேலும் உயர வேண்டும் எனின் ஏனைய சமூகங்களின் உதவியும் ஒத்துழைப்பும் அவசியம் தேவையாகும்.
நாம் ஏனைய சமூகத்தவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கூறினால் எமது விடுதலைப் போராட்டத்தைக் கைவிட்டு விட்டோம் என சிலர் நினைக்கிறார்கள் இது அவர்களது அறியாமையின் வெளிப்பாடாகும்.
தனிமனித போராட்டமல்ல
முஸ்லிம் காங்கிரஸின் போராட்டம் ஒரு தனி மனிதனின் போராட்டம் என நினைத்துவிடக்கூடாது. இது ஒரு சமூகத்தின் விடுதலைக்காக தோற்றுவிக்கப்பட்ட போராட்டமாகும்.
அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, நசுக்கப்படுகின்ற சமூகத்தின் விடுதலையை வேண்டி நிற்கின்ற போராட்டமாகும். பாராளுமன்ற ஆசனங்களுக்காகவோ அமைச்சர் பதவிகளுக்காகவோ இக்கட்சி உருவாக்கப்பட்டதல்ல.
வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து அகதிகளாக இடம்பெயர்ந்தவர்களது வரலாற்றை எழுதுகின்றபோது அந்த வரலாற்றில் முதலில் எழுதப்பட வேண்டியது எனது பெயராகும். இவ்வாறான பல தியாகங்களுக்கு மத்தியில் இக்கட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக உருவாக்கப்பட்ட எமது உழைப்புக்கு பாராளுமன்றக் கதிரையைக் கொண்டு விலை பேசாதீர்கள்.
தமிழ் பேசும் மக்களுடைய வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற பலருக்கு தமிழில் ஒரு வார்த்தைகூட எழுதவோ வாசிக்கவோ தெரியாது. திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 30 ஆயிரம் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பாராளுமன்றத்தில் இருந்து கொண்டிருக்கும் 3 சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 30 தமிழ் சொற்கள் கூட தெரியாது. இப்படிப்பட்டவர்களால் இன ஐக்கியம் பற்றி எப்படி பேச முடியும்? இன ஐக்கியம் என்பது உள்ளத்தில் இருந்து உருவாக வேண்டும்.
இக்கூட்டத்தில் தபால் தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சர் எம்.எல்..எம்.ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எம்.முஸ்தபா, லத்தீப் சின்னலெவ்வை, றிஸ்வி சின்னலெவ்வை, கல்முனை பிரதேச சபை தவிசாளர் எஸ்.எச்..மஜீட், சமய, கலாசார அமைச்சின் முஸ்லிம் திணைக்கள ஆலோசகர் எஸ்.எச்.எம்.ஜெமீல் ஆகியோரும் பேசினார்கள்.

-நன்றி வீரகேசரி  1998.11.26

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top