ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு
தன் காவலரையும் சுட்டுவிட்டாரோ?

வழக்கு தீர்ப்பால் சலிப்புக்கு ஆளான அமைச்சர் மனோ கணேசன்


நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை பார்த்தால் ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் காவலரையும் சுட்டுவிட்டாரோ என்று சலிப்புத்தான் வருகிறது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
நண்பர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இந்நாட்டில் வாழும் தமிழ் மக்களையும், ஏனைய முற்போக்காளர்களையும் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி யுள்ளது.
2006ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி காலை வேளையில் நடைபெற்ற இந்த படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில காலமாக விறுவிறுப்பாக நடைபெற்ற போது, ஏற்பட்ட எதிர்பார்ப்பு இப்போது சலிப்பில் முடிந்திருக்கின்றது.
இந்த வழக்கு தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக ஆஜரான தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம். . சுமந்திரன் மேன்முறையீடு செய்யப் போவதாக கூறியிருப்பதை வரவேற்கிறேன்.
அதேவேளை இந்த வழக்கு விசாரணையில் பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் போக்குகள் குறித்தும் திருப்தியடைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமருடனும், கூட்டமைப்பு தலைவருடனும் உரையாட உள்ளேன்.
இந்நாட்டின் நீதித்துறை மீது உலகமும், தமிழர்களும் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற கேள்வி இன்று மீண்டும் எழுந்திருப்பது நியாயமானது என நினைக்கின்றேன்.

இந்த தீர்ப்பு நிச்சயமாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனிதவுரிமை கூட்டத்தில் எதிரொலிப்பதை தவிர்க்க முடியாது. என்று மனச்சலிப்புடன் தெரிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top