கல்முனையில் 37 வருடங்களுக்கு முன் அரசினால் இடப்பட்ட அத்திபாரத் தூண்கள் கைவிடப்பட்ட நிலையில்
கல்முனை நகரில் அரச கட்டடத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கு இடப்பட்ட அத்திபாரத் தூண்கள் தொடர்ந்து கட்டடம் எழுப்பப்படாமல் சுமார் 37 வருடங்களுக்கும் மேலாக யாரும் கவனிப்பாரற்ற நிலையில் அப்படியே கைவிடப்பட்டிருப்பது குறித்து இப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இந்த இடத்தில் அத்திபாரத் தூண்கள் இலங்கை நாட்டின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுரத்தில் அல்லது பொலன்னறுவையில் ஆட்சி செய்த மன்னர்கள் பாவித்த கட்டடம் ஒன்றின் அத்திபாரத் தூண்கள் போன்று காட்சியளித்துக் கொண்டிருப்பது அரசியல்வாதிகளின் கண்களுக்கு இன்னும் தெரியாமல் இருப்பது ஏன் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இங்குள்ள அரச காரியாலங்கள் இட வசதிகள் இல்லை என்று காரணம் காட்டி அம்பாறைக்கு கொண்டு செல்வதற்கு எத்தனிக்கும் நிலையில் தமிழ் மொழி பேசும் பிரதேசத்தில் காரியாலயங்கள் செயல்படுவதற்கு வசதியான இந்த இடம் ஏன் அதிகாரிகளால் கவனிக்கப்படாமல் உள்ளது என்றும் வினவப்படுகின்றது.
கல்முனையில் கட்டடங்கள் அவசியமில்லை எனக் கருதி இந்த அத்திபாரத் தூண்களோடு இடம் கைவிடப்பட்டு விட்டதா? எனவும் மக்களால் வினவப்படுகின்றது.
முன்னாள் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் பதவி காலத்தில் அரச செயலகக் கட்டடத் தொகுதியை விரிவாக அமைக்கும் பொருட்டு இந்த அத்திபாரத் தூண்கள் அன்று கல்முனை நகரில் இடப்பட்டன. அதில் ஒரு பகுதியில்தான் தற்போதுள்ள அரச செயலகக் கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டு பல அரச காரியாலயங்கள் அதில் செயல்படுகின்றன.
கட்டடம் கட்டப்பட்ட அந்தக் கால கட்டத்தில். போதிய நிதி இல்லாமை போன்ற காரணங்களால் இந்த அத்திபாரத் தூண்களில் கட்டடங்கள் அன்று பூரணமாக கட்டிமுடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கடந்த 37 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த அத்திபாரத் தூண்களே இன்றுவரை இதில் எதுவித வேலைகளும் தொடராமல் சரித்திர காலக் கட்டடங்களின் தூண்கள் போன்று கல்முனை அரச செயலகக் கட்டடத் தொகுதிக்குப் பின்புறத்தில் மறைந்து கொண்டிருக்கிறது.
கல்முனையில் அரச காரியாலயங்களுக்கு கட்டடங்கள் கட்டுவதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் நில வசதிகள் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கும் இக் காலகட்டத்தில் இப்படி அத்திபாரத் தூண்கள் இடப்பட்ட நிலையில் வெற்று நிலம் இருந்து கொண்டிருப்பது அதிஸ்டத்திலும் அதிஸ்டமல்லவா? என மக்கள் கூறுகின்றனர்.
கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்தில் இந்த அத்திபாரத் தூண்களும் எதிர்காலத்தில் அபிவிருத்தி செய்யப்படுமா? இல்லை அநுராதபுரம், பொலனறுவை போன்ற பிரதேசங்களில் இருப்பது போன்று எமது எதிர்கால சந்த்தியினருக்கு சரித்திரகால இடமாகத்தான் இந்த அத்திபாரத் தூண்கள் இருக்கப் போகின்றதா? என இப் பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
0 comments:
Post a Comment